திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக சார்பில் 'விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக் கூட்டத்திற்காக 3 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 369 ஏக்கரில் பொதுக்கூட்ட மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு லட்சம் தொண்டர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் தற்பொழுது தயார் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 5 லட்சம் திமுக தொண்டர்கள் கூடுவார்கள் என திமுகவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டத்திற்கான இறுதிகட்ட ஆயத்தப் பணிகள் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்று வருகிறது.
காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வரும் ஸ்டாலின் அங்கிருந்து காரில் பொதுக்கூட்ட இடத்திற்கு வரயிருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் காலையும், அதேபோல் மாலை நிகழ்விலும் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண்மை, நீர்வளம், சுகாதாரம் ஆகிய துறை சார்ந்த நிபுணர்கள் இந்த கூட்டத்தில் உரையாற்றுவார்கள் என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.