இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தார். அவருடன் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜேரட் குஷ்னரும் வந்திருந்தனர். அகமதாபாத் மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிபர் ட்ரம்ப்பும், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர். மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகையை நாடே எதிர்பார்க்கிறது என்று பிரதமர் மோடி ட்வீட் செய்திருந்தார்.
இந்த நிலையில், ட்ரம்ப் விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பில்லாததால், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்தனர். உடல்நிலை சரியில்லாத சோனியா, கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும், ராகுல் காந்தியையும் அழைத்து இருவரில் ஒருவரை கட்சிக்குத் தலைமையேற்க கூறியதாக சொல்லப்படுகிறது. இருவரும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறுகின்றனர். கட்சியின் சீனியர்களின் சாய்ஸ், ராகுல்காந்தி. அவரோ, ப.சி.யையும் ஏ.கே. அந்தோணியையும் அழைத்து உங்களில் ஒருவர் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் அகில இந்திய தலைவர் நியமனமானதும், தமிழக காங்கிரஸ் தலைமையிலும் மாற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கே.எஸ்.அழகிரி கொடுத்திருக்கும் மாநில நிர்வாகிகள் பட்டியலை கிடப்பில் வைத்துவிட்டார் சோனியா. புதிய தலைவர் நியமனத்தின் போது, எம்.பி.க்களாக இருக்கும் டாக்டர் விஷ்ணுபிரசாத், டாக்டர் ஜெயக்குமார், வசந்தகுமார் ஆகியோரின் செயல்தலைவர் பொறுப்பையும் புதியவர்களிடம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக சொல்கின்றனர்.