புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநரும் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், அவருடன் பணியாற்றியவரின் இல்ல விழாவில் கலந்துகொள்ள உடுமலைப்பேட்டை சென்றார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இன்று இரண்டு முதலமைச்சர்களுக்கு நான் வாழ்த்து சொல்ல வேண்டும். ஒன்று அண்ணன் மு.க. ஸ்டாலின். இரண்டாவது புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி. இருவரும் முதலமைச்சர்களாக பொறுப்பேற்று இரு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இருவருக்கும் வாழ்த்துகள். நேற்றில் இருந்து இரண்டு ஆண்டுகள் சாதனைகள் என சொல்லிக் கொண்டுள்ளார்கள்.
முதலமைச்சருக்கு எளிய கேள்வி, இரண்டு ஆண்டு சாதனைகளைப் பற்றி பேசும்போது ஜாதி, மதம் என பிரித்துப் பார்ப்பவர்களால் திராவிட மாடலை புரிந்துகொள்ள முடியாது. இதுதான் முதலமைச்சரின் ஸ்டேட்மெண்ட். எப்படி பிரித்துப் பார்ப்பதனால், எதை வைத்துப் பிரித்துப் பார்ப்பதால் இந்துக்களுக்கு நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள். நான் இந்துவாக தனி நபராக இந்த கேள்வியை கேட்கிறேன். பிரதமர் எல்லா மத விழாக்களுக்கும் வாழ்த்து சொல்கிறார். ஆளுநர்கள் எல்லோரும் அனைத்து விழாக்களுக்கும் வாழ்த்து சொல்கிறோம். இதற்கு பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.
நாளிதழ்களில் நிறைய விளம்பரங்கள். மகிழ்ச்சி. இது அரசாங்க விளம்பரம் அல்ல. அமைச்சர்கள் விளம்பரம் கொடுத்துள்ளார்கள். அமைச்சர்களின் துறைகளில் நிதி இருக்கிறதோ இல்லையோ, அனைத்து விளம்பரங்களிலும் உதயநிதி இருக்கிறார். இந்த இரண்டாண்டு சாதனையில் வாரிசு உருவானது இன்னொரு சாதனை. அறிவிப்புகளை திரும்பப் பெறும் ஆட்சியாகவும் இந்த ஆட்சி இருக்கிறது. இன்னும் மக்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். செய்ய வேண்டும் என்பது எனது கருத்து” எனக் கூறினார்.