கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசுகையில், ''கோவையில் நிகழ்ந்த சிலிண்டர் வெடிப்பில் இறைவன் அருளால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அதைக்கொண்டு வந்தவரே பலியான நிகழ்ச்சி அனைவர்க்கும் தெரியும். ஆனால் தமிழக முதல்வர் இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார். இதைப் பற்றி சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர், அதுவும் காவல்துறைக்குத் தலைவராக இருப்பவர் இப்படி மௌனம் சாதிப்பது தமிழக மக்களுக்கு வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இனியாவது தமிழக அரசு பயங்கரவாதிகள் விஷயத்தில் கடுமையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது.
அதனால் வெறும் வாக்கு வங்கி அரசியலை மட்டும் மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பொறுப்பேற்று அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கரூரைச் சேர்ந்த இரண்டு பேருக்குள் நடக்கிற சண்டையாக இதனைப் பார்க்கக் கூடாது. கோயம்புத்தூரில் நிகழ்ந்துள்ள வெடி விபத்தானது எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள விஷயம். அதனால் அமைச்சரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ணமும். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போதை கலாச்சாரம் பெருகிக் கொண்டிருக்கிறது. விடியல் ஆட்சி தருகிறோம் என்று சொல்லிவிட்டு முதல்வரே ஏன்டா விடிகிறது என்று புலம்புகிற அளவுக்குத் தான் இன்று நிலைமை இருக்கிறது'' என்றார்.