Skip to main content

''அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடந்திருக்க முடியாது''-பாமக ராமதாஸ் வேதனை

Published on 14/05/2023 | Edited on 14/05/2023

 

 "Without their cooperation this could not have happened"-Pmk Ramdas

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்திய மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் பலர் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் 16 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மீதமுள்ள 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 "Without their cooperation this could not have happened"-Pmk Ramdoss

 

இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த  எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 15 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவரும் உடல்நலம் பெற விழைகிறேன்.

 

தமிழ்நாட்டில் அரசால் நடத்தப்படும் மது வணிகம் முழுமையாக கைவிடப்பட வேண்டும்; மதுக்கடைகள் மூடப்பட்டு முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதற்கு முற்றிலும் நேர் எதிரான வகையில் தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் கள்ளச்சாராய வணிகம் அதிகரித்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையுடன் கள்ளச்சாராயம் உறைகளில் விற்பனை செய்யப்படுவதை பா.ம.க. அம்பலப்படுத்தியது. அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் மூவரின் உயிரைப் பறித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டியது தமிழக அரசின் சட்டப்பூர்வ கடமையாகும். அதற்காகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் மதுவிலக்கு நடைமுறை என்ற தனிப்பிரிவு காவல்துறையில் செயல்பட்டு வருகிறது.  அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்கவே முடியாது. கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு உள்ளூர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரும், மதுவிலக்கு நடைமுறைப்பிரிவினரும் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் அனைவரும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இது குறித்து விசாரணைக்கும் ஆணையிட வேண்டும்.

 

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கும் முறையே ரூ. 10 லட்சமும்,  மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருவோருக்கு முறையே ரூ.5 லட்சமும்  உதவித்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் அனைவருக்கும் தரமான மருத்துவம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்