தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகியவை ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., பா.ம.க., பா.ஜ.க., காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தேசியத் தலைவர்களும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (01/04/2021) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் மோடி எதிர்ப்பலையோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பலையும் வீசுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை, விஷம் போல் உயர்ந்துள்ளது; அதிமுக ஆட்சியில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, பால் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. பொள்ளாச்சி கொடூரம் பற்றி பிரதமர் மோடி ஏன் கேட்கவில்லை? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சும்மா விடப் போவதில்லை.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகள் தந்துள்ளோம். இன்று மதுரை வரும் பிரதமர், எய்ம்ஸ் நிலை என்னவென்று பார்க்க வேண்டும். சிஏஏ சட்டத்தை ஆதரித்து வாக்களித்துவிட்டு நாடகமாடுகிறது அதிமுக. ஏழு பேரை விடுதலை செய்ய பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைப்பாரா? இலங்கை அரசை எதிர்த்து வாக்களிக்காத மத்திய அரசைத் தட்டிக்கேட்க முதல்வருக்குத் துணிவில்லை. மதுரை வரும் பிரதமரிடம் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற முதல்வர் வலியுறுத்துவாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.