தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
அதேபோல், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில், மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீப்ரியா, இன்று (17/03/2021) தனது வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
பின்னர் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஸ்ரீப்ரியா, "நான் மைலாப்பூரைச் சேர்ந்தவள்; இங்குதான் பிறந்தேன், வளர்ந்தேன். மறைந்தாலும் கிருஷ்ணாம்பேட்டைதான். பெண்ணால் முன்னேற்றம் உண்டாக்க முடியும் என்பதால் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள். மக்கள் எதிர்பார்க்கும் மாற்று ஆட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும். மக்கள் நீதி மய்யம் அறிவித்த வாக்குறுதிகளில், சிறு மாற்றத்தைச் செய்து மற்ற கட்சியினர் வாக்குறுதியாக அறிவித்து வருகிறார்கள். வீட்டின் முன்னேற்றத்திற்கு எப்படிப் பெண் உதவியாக இருப்பாரோ, அதேபோல் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்கள் உதவ முடியும். கட்சி ஆரம்பித்தபோது இருந்தே நாங்கள் 'நாளை நமதே' என்பதை முன்னிறுத்தி வருகிறோம். திரைத்துறையினர் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். தந்தை மற்றும் குரு ஸ்தானத்தில் உள்ளவர்" என்றார்.