நேற்று (18.08.2021) பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரமில்லா நேரத்தில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாட்டில் நடந்த கொள்ளை, கொலை தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கை மீண்டும் தற்போதுள்ள அரசு கையிலெடுத்துள்ளது” என்று பேசினார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். கொடநாடு கொள்ளை, கொலை தொடர்பாக முதல்வர் பேசுகையில், ''கொடநாடு கொலை வழக்கில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல நீங்களே அந்தப் பிரச்சனையைக் கிளப்புகிறீர்கள். அந்த மாதிரிதான் அதிமுகவினரின் போக்கு உள்ளது'' என்று கூறினார். இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். வரும்போதே கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், அதிமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிடவில்லை என சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார். ''நேற்று அதிமுக உறுப்பினர்கள் தாங்களாகவே வெளியேறினர். நான் வெளியேற்றவில்லை. ஆனால் என் அனுமதி பெறாமல் அதிமுக உறுப்பினர்கள் பதாகை ஏந்தி கூச்சலிட்டனர். மக்கள் பிரச்சனையைப் பேச வேண்டிய அவையில் தனிப்பட்ட பிரச்சனையை எழுப்பக்கூடாது'' என கூறியுள்ளார்.