தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவார், தான் வகித்து வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இந்த மாதம் 2ம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அவர் கட்சியின் புதிய தலைவரை நியமிக்க ஒரு குழுவினை அமைத்தார்.
இன்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை நியமிப்பது குறித்து விவாதிக்க கூடிய அந்த குழுவினர் கூட்டத்தில், சரத் பவாரே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
முன்னதாக இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.