நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக 37இடங்களை கைப்பற்றியது. தமிழ்நாட்டில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 இடங்களை கைப்பற்றியது. இதில் செந்தில்பாலாஜி திமுக சார்பாக அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த வெற்றியை அடித்து திமுகவில் ஒரு அசைக்க முடியாத சக்தியாக செந்தில் பாலாஜி வளர்ந்து விட்டார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். முதலில் திமுகவில் இருந்தவர் பின்பு அதிமுகவில் இணைந்து போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று பிரிந்த போது சசிகலா அணியில் இருந்தார். பின்பு சசிகலா ஜெயிலுக்கு சென்ற பிறகு அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டது. அப்போது தினகரனின் அமமுகவில் தன்னை இணைத்து கொண்டு பணியாற்றி வந்தார். தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியை சபாநாயகர் பறித்தார். இதனையடுத்து கொஞ்ச நாள் தினகரனின் கட்சியில் இருந்த செந்தில்பாலாஜி மீண்டும் திமுகவில் இணைந்து இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அரசியலில் ஆரம்ப காலத்தில் இருந்தே செல்வாக்கு மிக்கவராகத்தான் செந்தில் பாலாஜி தன்னை அரசியலில் வெளிப்படுத்தி வருகிறார். தொகுதி மக்கள் மத்தியிலும் செந்தில்பாலாஜிக்கு நல்ல பெயரே உள்ளது என்று அத்தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொங்கு மண்டலத்தில் தனக்கு என்று ஒரு தனி செல்வாக்கை செந்தில்பாலாஜி வைத்துள்ளார் என்று கூறுகின்றனர். தற்போது இவர் திமுகவில் இருப்பதால் கொங்கு மண்டலத்தில் திமுக மீண்டும் செல்வாக்கு மிக்க கட்சியாக உருவெடுத்து விட்டது என்கின்றனர். இருந்தாலும் திமுகவில் இருக்கும் ஒரு சில சீனியர்களை செந்தில்பாலாஜி ஒதுக்குவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் நேருவுக்கு செந்தில் பாலாஜி முக்கியத்துவம் தருவதில்லை என்றும் கூறுகிறார்கள். கரூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு கூட, நேருவை செந்தில் பாலாஜி அழைக்கவில்லை என்று சொல்கிறார்கள்.தென் மாவட்டத்தில் இருக்கும் திமுக சீனியர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் செந்தில் பாலாஜி அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் கூறிவருகின்றனர். திமுகவில் செந்தில்பாலாஜி தந்து செல்வாக்கை உயர்த்தி இருந்தாலும் சீனியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் கட்சிக்கு பலமாக இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.