தமிழகத்தில் டிசம்பர் இறுதியில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற இடத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என்றும், விடுபட்ட 9 மாவட்டங்களை 4 மாதங்களில் மறுவரையறை செய்து தேர்தலை நடத்தவேண்டும்" என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் உள்ளாட்சி பொறுப்புகளை அதிமுகவில் யாரிடம் கொடுக்கலாம் என்று தீவிர ஆலோசனையில் அதிமுக தலைமை உள்ளதாக சொல்கின்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, கூட்டணி அமைக்கும் பணியை அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்திருந்தார். அதன் காரணமாக இருவரும் டெல்லிக்கும், சென்னைக்குமாக பறந்து பறந்து, கூட்டணியையும், தொகுதி பங்கீட்டையும் பேசி வந்தார்கள். மேலும் எடப்பாடியின் நம்பிக்கைக்கு உரிய நபர்களாக அதிமுகவில் வலம் வந்தனர். இதனால் அமைச்சர்களின் சொந்த தொகுதிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்று புலம்பியதாக தெரிகிறது. அதோடு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதனால், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்வதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள், கொங்கு மண்டலத்தில் முகாமிட்டு வெற்றிக்கான வழியை நோக்கி செயல்படுங்கள் என்று முதல்வர் எடப்பாடி கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் கூட்டணி கட்சிகள் அதிமுகவில் மேயர் சீட் கேட்டு அழுத்தம் கொடுத்து வருவதால் எடப்பாடி கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.