Skip to main content

“அது சரியான நிலைப்பாடாக இருக்காது” - பாட்னா ஆலோனைக் கூட்டத்திற்குப் பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

nn

 

பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சற்று காலதாமதமாக நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசியுள்ளனர்.

 

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி. ராஜா, மார்க்‌சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர் மற்றும் சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 16  எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட  6 மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். 

 

பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இடம்பெறவில்லை. இந்நிலையில் சென்னை வந்த தமிழக முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது, ''மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமையே தமிழ்நாட்டில் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமையே அகில இந்திய அளவிலும் முக்கியம் என வலியுறுத்தினேன். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதை அனைத்து கட்சிகளும் ஒற்றை இலக்காக கொண்டுள்ளனர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசியல் கட்சிகள் இடையே குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டேன். ஒருங்கிணைந்த நடவடிக்கை குழு அமைத்திட வேண்டும் என்றேன். செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்காமல் எந்த நோக்கத்தோடும் நான் வெளியேறவில்லை. நன்றி கூறும் வரை கூட்டத்திலிருந்தேன். விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதால் வெளியே வந்தேன்.

 

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது. பிரதமர் வேட்பாளர் பற்றி இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படவில்லை. தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டமாக இதனை யாரும் நினைக்க வேண்டாம். 2023 ஆம் ஆண்டு ஜூனில் சந்தித்தோம் 2024 மே மாதத்தில் வெற்றி பெற்றோம் என்று இருக்கும். மாநிலத்தில் எந்த கட்சிக்கு செல்வாக்கு உள்ளதோ அந்த கட்சியின் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும். தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்காது. இப்பொழுதுதான் எதிர்க்கட்சிகள் கூட்டணி கருவாகி இருக்கிறது. அது உருவாக இன்னும் சில மாதங்கள் ஆகும். கூட்டணி அமைக்காவிட்டால் தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளலாம் எனக் கூட்டத்தில் வலியுறுத்தினேன். எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டம் நம்பிக்கை ஏற்படுத்தும் கூட்டமாக இருந்தது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்