கரூர் மாவட்ட திமுகவில் வாசுகி முருகேசனுக்கு பிறகு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் நன்னீயூர் ராஜேந்திரன். இவருக்கு வலது கரமாகவும், உதவியாளராகவும் இருந்தவர் கோழி செந்தில். இவரை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்ப அணியின் கரூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு கட்சியின் உள்ளாட்சி தேர்தல் குறித்த அவசர ஆலோசனை கூட்டத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கடுமையாக பேசின பேச்சு கட்சியினரிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
''நாம் எதிரியை கூட களத்தில் நேருக்கு நேர் சந்தித்து சண்டை போடலாம். ஆனால் கூடவே இருந்து எதிரிக்கு உளவு சொல்லும் துரோகியை நாம் விட்டு வைக்கவே கூடாது. அவர்கள் இந்த வேலைக்கு பதிலாக வேறு தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம். இடைத்தேர்தலில் நாம் நடத்திய அத்தனை ரகசிய கூட்டத்தையும் நம்முடைய தேர்தல் வெற்றிக்கு வகுத்த திட்டங்கள் அத்தனையையும் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து எதிரிகளுக்கு அப்படியே அனுப்பியிருக்கிறார். இதை கண்டுபிடித்து விட்டேன். அவரை கட்சியை விட்டே நீக்க சொல்லி எழுதியிருக்கிறேன்'' என்றார். அதன் வெளிப்பாடு தான் கோழி செந்தில் நீக்கம் என்கிறார்கள்.
செந்தில்பாலாஜியின் இந்த பேச்சுக்கு பிறகு கோழி செந்தில் கட்சி அலுவலகம் பக்கம் வராமல் தவிர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் இந்த விடுவிப்பு என்கிறார்கள்.
கோழி செந்தில் குறித்து நாம் விசாரித்தபோது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட பொறுப்பாளாக இருந்த நன்னீயூர் ராஜேந்திரனின் உதவியாளராக இருந்தார் கோழி செந்தில். கட்சியில் மாவட்ட செயலாளர் தேர்தல் நடந்தபோது, கரூர் சின்னசாமி அதற்கு போட்டியிட்டார். அப்போது, நன்னீயூர் ராஜேந்திரன் என்ன என்ன திட்டம் வகுக்கிறார் என்பதை அப்போதே ரகசியமாக உளவு பார்த்து கரூர் சின்னசாமிக்கு தகவல் சொல்லியவர்தான் கோழி செந்தில் என்கிறார்கள்.
கட்சியின் அலுவலகத்தை மதிய நேரங்களில் தவறான விசயங்களுக்கு பயன்படுத்தி கையும் களவுமாக பிடிப்பட்ட போதும் நன்னீயூர் ராஜேந்திரன் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கவனமாக தவிர்த்து வந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மாவட்ட பொறுப்பாளர் ஆன பின்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் நடத்திய ரகசிய கூட்டங்கள் அனைத்தையும் வீடியோ, டாக்குமெண்டுகளை அனுப்பியிருக்கிறார்.
இதை எப்படி செந்தில்பாலாஜி கண்டுபிடித்தார் என்று நாம் விசாரித்த போது, அதிமுக அமைச்சருடன் இருந்து கொண்டு அங்கிருந்து உளவு பார்த்து செல்லும் அதிமுக நிர்வாகி ஒருவர் தான் செந்தில்பாலாஜியிடம் போட்டு கொடுத்து விட்டார் என்கிறார்கள்.
அரசியலில் நேரடியான அரசியலை விட உள் அரசியல்களை மிக கவனமாக கையாள வேண்டும் என்பதை கோழி செந்தில் நீக்கம் கட்சியிருக்கு உணர்த்தியிருக்கிறது என்கிறார்கள் கரூரில் உள்ள திமுக முக்கிய நிர்வாகிகள்.