அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உள்ளிட்ட இலாகாக்கள் மற்ற இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் எனத் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டு இருந்தது.
இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். தொடர்ந்து ஆளுநரின் முடிவு நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சட்ட ஆலோசகர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் தமிழக ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், 'இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார். அமைச்சர் ஒருவரை சேர்ப்பது அல்லது விடுவிப்பது முதலமைச்சரின் வரையறைக்கு உட்பட்டது. இதில் வேறு யாரும் உரிமை கொள்வதற்கு அரசியல் சாசனத்தில் இடமில்லை. தமிழ்நாடு ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மட்டுமே உரிமை உண்டு. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த உரிமையும் இல்லை. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது அவர் மீதான விசாரணையை பாதிக்காது' எனத் தெரிவித்துள்ளார்.