கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் பேசுகையில், ''கற்பனையாக நாட்டு மக்களை எப்படித்தான் ஏமாற்றுவார்கள் என்று தெரியவில்லை. நியூட்ரினோ என்பதை வெடிகுண்டு தயாரிக்கும் இடம் என வைகோ சொல்கிறார் என்றால் நாம் என்ன பண்ண முடியும். நியூட்ரினோ என்பது ஒரு ஆராய்ச்சி மையம். அது 9 நாடுகளில் இருக்கிறது. ஒன்றரை கிலோ மீட்டர் கொண்ட மலையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் அந்த மலையில் வளங்கள் இல்லை. மரங்கள் இல்லை. அந்த நியூட்ரினோ கதிர் பொழியும் போது அதன் தன்மை எப்படி மாறுகிறது என்பதைச் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் தெரிந்து கொள்வதற்காக அந்த இடத்தை தேர்வு செய்தார்கள். இன்று தேனி பொட்டிபுரம் உலகின் புகழ்மிக்க இடமாக மாறி இருக்கும் ஆனால் வைகோ போன்றவர்கள் அதைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜி சொல்கிறார் கோவை வெடி விபத்தில் ஆணி, இரும்பு குண்டுகள் எதற்காக இருந்தது என்ற ஒரு கற்பனையில் பாஜகவினர் பேசுகிறார்கள் என்று சொல்கிறார். ஆனால் அங்கு இருக்கின்ற காவல் ஆணையர் அந்த ஆணி, இரும்பு குண்டு அது மட்டுமல்ல முபீன் வீட்டில் 75 கிலோ வெடி பொருட்கள் எடுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். அதை போலீசாரே தூக்கிக்கொண்டு வருகிறார்கள். 75 கிலோ வெடிபொருள் மட்டும்தான் இருந்ததா? இன்னும் எத்தனை இடத்திற்கு அந்த கார் சென்றது. இரவு பத்தரை மணிக்கு கிளம்பிய கார் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அதிகாலை 4 மணிக்கு வெடிக்கிறது. பத்தரை மணிக்கு கிளம்பிய கார் எங்கெல்லாம் போனது. இன்னும் எவ்வளவு வெடி மருந்துகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க போலீசார் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் செந்தில் பாலாஜி கூலாக உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். இதற்கான இரண்டு வித்தியாசத்தையும் நீங்கள் பார்க்கிறீர்களா? எனவே செந்தில் பாலாஜியையும் என்.ஐ.ஏ சோதனையில் சேர்க்க வேண்டும்'' என்றார்.