ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஏறத்தாழ அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற பெண் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சின்னங்கள் முறையாக கட்சி வேட்பாளர்களுக்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டது. தற்போது மொத்தம் 77 வேட்பாளர்கள் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளரான தமாகா - பாஜக கூட்டணி வேட்பாளர் தென்னரசுவிற்கு வாக்கு சேகரிக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஈரோடு கிழக்கு அண்ணாமலையார் வீதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், யாருமே பிரச்சினைகளைப் பற்றி வாய் திறக்கமாட்டார்கள். அடிமை சாசனத்தை திமுகவிற்கு எழுதி கொடுத்து இன்று தமிழ்நாட்டில் நடக்கும் அட்டூழியங்களுக்கு கூட்டணி கட்சிகள் துணை போகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் கூட்டணி கட்சிகள் வெறுப்பே சம்பாதிக்கிறது என்பது தெரிகிறது. மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் தராமல் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டுவதும், திட்டத்தை மக்களுக்கு தராமல் தன் தகப்பனாருக்கு 100 கோடியில் நூலகம் அமைப்பது 84 கோடி பேனா அமைப்பது என மக்கள் வெறுப்பை திமுக சம்பாதித்து கொண்டுள்ளது.
நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போட்டது திராவிட முன்னேற்ற கழகத்தின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் ஆட்சி தான் இருந்தது அன்று. காந்திசெல்வன் திமுகவின் இணை அமைச்சர் கையெழுத்து போட்டுள்ளார். எல்லாம் மறந்துவிட்டு பேசுகிறார்கள். இந்த நீட் தொடர்ந்து இருப்பதற்கு காரணமே காங்கிரஸ். ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் வழக்காடி இந்த நீட் வருவதற்கு காரணமாக இருந்தவர்” எனக் கூறினார்.