கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியில் இருந்த பாஜகவை வீழ்த்தி இழந்த ஆட்சியை காங்கிரஸ் கட்சி மீட்டெடுத்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தின் முதல்வர் யார் என்று போட்டி நிலவி வருகிறது. சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரின் ஆதரவாளர்களும் தங்களது தலைவர்தான் முதல்வராக வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் கழிந்தும் இன்னும் காங்கிரஸால் முதல்வரை அறிவிக்க முடியவில்லை என அம்மாநில பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, “பெரும்பான்மை பலம் கிடைத்தும் காங்கிரஸ் இன்னும் முதல்வர் வேட்பாளரை இறுதி செய்யவில்லை. இது காங்கிரஸில் உட்கட்சியின் நிலைமையை காட்டுகிறது. அரசியலை விட மக்களின் நலன் முக்கியம். எனவே காங்கிரஸ் ஒரு முதல்வரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் பாஜக வென்ற பிறகு முதலமைச்சர் தேர்வில் கடும் இழுபறி நிகழ்ந்து, எட்டு நாட்களுக்கு பிறகு தான் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், 2021 ஆம் ஆண்டும் அசாம் மாநில முதலமைச்சரை தேர்வு செய்வதில் பாஜகவுக்கு ஏழு நாட்களானது. இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வந்த முதல்வர் நாற்காலி போட்டி? 48 மணி நேரத்தில் புதிய அமைச்சரவை!