ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்சனையை விட லட்டு தான் முக்கியமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஒரு நாளைக்கு 6 மணி நேரம் பேசியிருக்கேன். 40 நாள்.. எல்லா மருத்துவரும் இப்படி பேசலாமா? என்று கேட்கிறார்கள். அப்படி பேசியே ஒன்னும் விடியலையே. வேர்த்து விறுவிறுத்து பேசி கீழே இறங்கினால், படம் நடிக்கலையா? படம் எடுக்கலையா? என்று கேட்கிறார்கள். இது தான் அவனுக்கு பிரச்சனையாக இருக்கிறது.
இப்போது லட்டில் மாட்டுக் கொழுப்பு தடவி விட்டானாம்.. அதை பிரச்சனையாக பேசுகிறார்கள். சாப்பிட்டவன் யாரும் சாகலேல, விடுப்பா. மாட்டுக் கொழுப்பு இருந்தாலும் சரி, அதில் ஒன்னுமே இல்லையென்றாலும் சரி, எனக்கு லட்டு இருந்தா போதும். அது எப்படி இருந்தாலும், நான் சாப்பிடுவேன். எனக்கு பிரச்சனை கிடையாது. மாட்டு கொழுப்பு தடவி விட்டதாக இந்தியா முழுவதும் பிரச்சனையாக பேசுகிறார்கள். இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை சுட்டு தள்ளுகின்றனர், சிறையில் அடைக்கின்றனர், மொட்டை அடித்து அனுப்புகின்றனர். அது உங்களுக்கு பிரச்சனையாக தெரியவில்லை. லட்டு தான் பிரச்சனையாக இருக்கிறது” என்று பேசினார்.