தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
காலை 10.30 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 131 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 102 சட்டமன்றத் தொகுதிகளிலும், மநீம கூட்டணி 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜியும், அதிமுக சார்பில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் போட்டியிட்டனர். இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே அதிமுக விஜயபாஸ்கர் முன்னிலை வகித்துவந்தார். இந்நிலையில், தற்போது திமுக வேட்பாளர் 907 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துவருகிறார். காலை முதல் சற்று ஏமாற்றத்தில் இருந்த திமுகவினர், தற்போது இச்செய்தி அறிந்து உற்சாகத்தில் இருக்கின்றனர்.