ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட உள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மணி என்கிற மேனகா போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் 11,629 வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஈரோட்டில் நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சீமான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திருமகனை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு தெரியாத செய்தியை நான் சொல்கிறேன். முதலில் நம் கட்சியில் சேரத்தான் அவர் வந்தார். இது உங்களில் அதிகமானோருக்குத் தெரியாது. அதன் பின் அவரது தந்தை என்ன சொன்னார் எனத் தெரியவில்லை. நானும், சரி நீ அங்கேயே இருந்து கொள் எனச் சொல்லிவிட்டேன். அவர் இறந்ததில் எனக்கு மிக மனத்துயரம். துன்பத்தில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்.
ஒன்றரை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக திருமகன் இருந்தார். சட்டமன்றத்தில் ஏதாவது மக்கள் பிரச்சனைகளைப் பேசிப் பார்த்தீர்களா? அவரது தந்தை போனாலும் பேசமாட்டார். மக்களின் பிரச்சனைகளை துணிந்து பேசுபவரை மக்கள் அனுப்ப வேண்டும்” எனக் கூறினார்.