ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மிஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், அதே முறைப்படி தங்களையும் விடுதலை செய்யக்கோரி நளினி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து நிவாரணங்களும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை வரவேற்றுள்ளார். 'பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது 7 பேர் விடுதலையில் முதற்கட்ட வெற்றி. மக்களாட்சி கோட்பாட்டிற்கு வரலாற்று சிறப்புமிக்க அணிந்துரையாக 6 பேர் விடுதலைக்கான தீர்ப்பு அமைத்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த விடுதலை இரண்டாவது வெற்றி. அரசின் தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போட கூடாது என்பதை இந்த தீர்ப்பு காட்டுகிறது.' என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.