Skip to main content

“எடப்பாடிக்கு எட்டப்பன் வரலாறு தான் பொருந்தும்” - கே.பாலகிருஷ்ணன்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 history of Eddyappan is suitable for Edappadi palaniswami says K. Balakrishnan

புவனகிரி பேரூந்து நிலையம் அருகே இந்தியா கூட்டணியின் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில்  பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி பானைச்சின்னத்திற்கு வாக்கு கேட்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். புவனகிரி ஒன்றியச்செயலாளர் பி.ஜெ.ஸ்டாலின் வரவேற்றார்.

இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசுகையில், “கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் திருமாவளவன் குறைந்த வாக்கில் வெற்றி பெற்றார். இந்த முறை வெற்றி பெறமாட்டார் எனக் கூறிவருகின்றனர்.  எதிரணியில் இருக்கிற கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்தபோது கூட உங்களால் திருமாவளவனை தோற்கடிக்க முடியவில்லை.   இன்றைக்கு  ஒண்ணா இருந்த கூட்டணி உங்களுக்குள்ளேயே உடைந்து போய் கிடக்கிறது. அதிமுகவை பல்வேறு கூறுகளாக உடைத்த பெருமை தமிழக வரலாற்றில் எடப்பாடி பழனிசாமிக்கு சேரும். அதேபோல இந்த தேர்தலிலே, தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்கிற கட்சியினுடைய முடிவுரையை எழுதுகிற காரியத்தையும் அதே எடப்பாடி பழனிசாமி தான் செய்து கொண்டிருக்கிறார்.

 history of Eddyappan is suitable for Edappadi palaniswami says K. Balakrishnan

எடப்பாடி பழனிசாமி மோடியிடம் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என பேசுகிறார். 5 ஆண்டு  ஆட்சியில்  மோடி செய்யக்கூடிய எல்லா பாவத்துக்கும்  பக்க பலமா இருந்தது நீங்கதானே. அந்தக் கொலைகார கூட்டத்திற்கு காவடி தூக்குனது நீங்க தான். இதையெல்லாம் செய்துவிட்டு நான் ஒரு விவசாயி எனக் கூறுகிறீர்கள்.  வெள்ளையனை எதிர்த்து போராடி தூக்கு மேடைக்கு சென்ற கட்டபொம்மனுக்கு ஒரு வரலாறு இருக்கும் என்று சொன்னால், அதனை காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும் ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது.  உங்களுக்கு எட்டப்பன் வரலாறு தானே பொருந்தும். விவசாயிகளுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களுக்கு  ஆதரவு அளித்தீர்கள். டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டத்தை நியாயப்படுத்தி அப்போது பேசினீர்கள். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் சட்டமன்றத்தில் இந்த 3 சட்டங்களையும் கிழித்து எறிய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். அதே சட்டமன்றத்தில் தான் நீங்களும் இருந்தீர்கள். ஏன் தீர்மானம் நிறைவேற்றவில்லை. சட்டத்தை நிறைவேற்றியது மோடி கூட்டம் என்றால்,  ஆதரித்த துரோகி கூட்டம் அதிமுக என்பதை மறந்துவிடக்கூடாது.

தமிழகத்தில் மோடி பாய் போட்டு படுத்தால் கூட ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. சிதம்பரம் தொகுதியில் பாஜகவால் டெபாசிட் பெற முடியுமா? தமிழகத்தில் எந்த தொகுதியில் அவர்களால் டெபாசிட் பெற முடியும்?. முகவரியே இல்லாத கட்சியை வைத்துக் கொண்டு எப்படி ஜெயிக்க முடியும். நாட்டு மக்கள் கட்டிய வரிப்பணத்தை அம்பானிக்கும், அதானிக்கும் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளீர்கள். இது தமிழகத்தில்  4 முறை பட்ஜெட் போடலாம். ஆனால் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் வாங்கிய கடனை  தள்ளுபடி செய்யவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என கூறினீர்கள். செய்தீர்களா? ரயில்வே துறையில் 30 லட்சம் வேலை காலியிடம் உள்ளது. அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களுக்கும், தொழிலாளிகளுக்கும் விரோதமான மோடி ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது.

குடியுரிமைச் சட்டம் குடியைக் கெடுக்கும் சட்டம் என அதிமுக, பாமக உள்ளிட்ட 12  எம்பி களிடம் ஆதரவு அளிக்கவேண்டாம் என வாதாடினோம் போராடினோம், கேட்கவில்லை. ஆதரவளித்து சட்டத்தை நிறைவேற்றி கொலைக் கருவியை பாஜக கையில் கொடுத்துள்ளனர். சட்டத்தை நிறைவேற்றிய கொலைகார கூட்டம் பிஜேபி என்றால் அந்தக் கொலைகாரக் கூட்டத்திற்கு துணையாக இருந்த துரோகிகள் அதிமுக, பாமக கூட்டம். இதனை யாராவது மன்னிப்பார்களா? அம்பேத்கர் இயற்றிய சட்டத்தை அகற்றிவிட்டு  மனுநீதி சட்டத்தை  அமல்படுத்தப்  பார்க்கிறார்கள்.

சிதம்பரம் தொகுதியில் பாஜக அதிமுகவை டெபாசிட்டை இழக்க செய்ய வேண்டும். அதுதான் திருமாவளவனின் வெற்றி. பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் ஆலோசனை வழங்கக்கூடிய திருமாவளவனை இந்த தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று பேசினார்.  

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் விஜய், ஆழ்வார், கீரப்பாளையம் ஒன்றியம் செல்லையா, நகர செயலாளர் மணவாளன், திமுக ஒன்றிய செயலாளர் மனோகர், மதியழகன், பேரூராட்சி தலைவர் கந்தன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் செந்தில்நாதன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பொறுப்பாளர் பாவணன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பூசி.இளங்கோவன், செயலாளர் சித்தார்த்தன், உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்