கரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,933- லிருந்து 12,380 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கரோனாவுக்கு எதிராக உயிரைக்கொடுத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் அரசு மருத்துவர்கள். அவர்களுக்கு, முக கவசங்கள் உட்பட பி.பி.இ. எனப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கிப் பாதுகாக்கவேண்டும் என்று குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் சூழலில், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சி.ஆர்.ஆர்.ஐ. பயிற்சி மருத்துவர்கள், டீனுக்கு எழுதிய கடிதம் தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது. "உணவு, தண்ணீராவது வழங்குங்கள்' என்பதுதான் அந்தக்கடிதத்தில், குறிப்பிடப்பட்டிருக்கிறது. மக்களுக்குத் தொற்று பரவாதபடி, தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு உணவு, தண்ணீரே இல்லாத நிலையில், பாதுகாப்பு கருவிகள் கிடைத்ததா? பரிசோதனை செய்யப்பட்டதா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள் மருத்துவ துறையினர்.