Skip to main content

“அண்ணாமலை ஏன் குறுக்க மறுக்க வருகிறீர்கள்?” - கேள்வியெழுப்பும் சீமான்!

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Seaman says Why are you coming to interrupt Annamalai

 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில், 40 தொகுதிகளிலும் நாங்கள் நிற்கிறோம். என்னைவிட ஒரு சதவீதம் அதிகமாக அண்ணாமலை வாக்கு வாங்க முடியுமா என்று கேட்டிருந்தார். தி.மு.க. எங்களுக்கு பங்காளி போன்றவர்கள் என்று பேசியிருந்தார். அதற்கு விமர்சித்து பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை , “ சீமானிடம் எனக்கு பிடித்ததே அவருடைய துணிச்சலான பேச்சும், தைரியமும் தான். ஒரு பெண் புகார் கொடுத்தவுடன் திமுக எங்களது பங்காளி என்று பேசுகிறார். இதனால், அவர் மீது வைத்திருந்த மரியாதை குறைந்து விட்டது” என்று கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், கோவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள  சீமான் நேற்று கோவை விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசும் அண்ணாமலையின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அரசு அதிகாரியாக இருந்து வந்தவர். கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியார் இதில் எல்லாம் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று அண்ணாமலை சொல்ல வேண்டும். அடிப்படையில், தமிழ்நாடு என்றாலே தமிழ் தேசியம்தானே. தமிழ் தேசியம் இல்லை என்றால், மோடி செல்லும் ஒவ்வொரு நாட்டிலும் தமிழை பற்றி ஏன் பேசுகிறார்?

 

கர்நாடகாவில் இருக்கும் போது ‘பிரவுட் கன்னடியன்’ என்று பேசுவிட்டு கர்நாடகா பா.ஜ.க தலைவராக வேண்டியது தானே?. இங்கே எதற்கு வந்தீர்கள்?. நான் மோடி, அமித்ஷாவுடன் சண்டை போட்டு கொண்டிருக்கும் போது, அண்ணாமலை நீங்கள் எதற்காக குறுக்க மறுக்க வருகிறீர்கள்? ஓரமாய் போய் நில்லுங்கள்.

 

என் கட்சியில் நான் தான் முடிவு எடுக்கிறேன். அது போல் அண்ணாமலை எடுக்க முடியுமா? இந்த கட்சியை நான் உருவாக்கியது. நீங்கள் எத்தனை நாளைக்கு தலைவராக இருப்பீர்கள்? பொன். ராதாகிருஷ்ணன் போல் இதற்கு முன்னாடி இருந்த பா.ஜ.க தலைவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?. அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு ஒரு மேஸ்திரி தான். ஆனால் நான் அப்படி கிடையாது. 20 தொகுதியில் ஆண்களையும், 20 தொகுதியில் பெண்களையும் என்னால் நிறுத்த வைக்க முடியும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்