தி.மு.க.வின் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்து தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் மட்டுமே தி.மு.க. மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில் தி.மு.க. தலைவருடன் பேசி மாநாடு போல் இல்லாமல், கூட்டம் நடைபெறுவதற்குத் திட்டமிடப்படும்.
இன்று மாலை கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது தி.மு.க.வுக்கு எவ்விதப் பின்னடைவையும் ஏற்படுத்தாது. கடந்த முறையும் இதே இடத்தில் மாநாடு நடத்த திட்டமிட்டபோது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது தலைவர்களுடைய அறிக்கைகள் தயாரிப்பதில் தாமதமானதால் மட்டுமே மாநாடு தேதி தள்ளிப்போனது. ஐ-பேக் நெருக்கடியால் மாநாடு ஏற்பாடுகள் தாமதமாகவில்லை.
ஐ.ஜே.கே., தி.மு.க. கூட்டணியிலிருந்து சென்றது அவர்களுக்குத்தான் நஷ்டம். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது போல் எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. முதல்வரின் கடைசி நேர அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கான அரசாணை வெளியிட வேண்டும். பல சிக்கல்கள் உள்ளது. அடுத்துவரும் அரசு உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்பது அ.தி.மு.க.வினருக்கான கடன் தள்ளுபடி. ஒரு விவசாயி கூட இதில் பலன் அடையவில்லை.
மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது பற்றி எனக்குத் தெரியாது. திருச்சியில் உள்ள 9 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். தேர்தல் விதிமுறைகள் கோவிட் தொற்றால் கட்டுப்பாடு அதிகமாக உள்ளது. கடந்த முறை விதிமுறைகள் விதிக்கப்பட்டது. அதையும் தாண்டி பணம் எடுத்துச் சென்றார்கள். பணம் கொடுத்தார்கள். போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சனை குறித்து தொழிலாளர்களை அழைத்துப் பேசி உரிய முறையில் தீர்வு காண வேண்டும்” என்றார்.