ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில் அதை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டம் முடிந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “இணைய வழி சூதாட்டங்களை தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் அதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆளுநர் சந்தேகங்கள் கேட்டபொழுது தமிழ்நாடு அரசு தெளிவான விளக்கத்தை தந்தது. ஆனால், ஆளுநர் சட்டப் பேரவையில் இயற்றப்பட்ட சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு இயற்ற அதிகாரம் இல்லையென சொல்லி திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்.
அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டபோது, அதுகுறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டதாவது, ‘சட்டத்தில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி குறைகளை நிவர்த்தி செய்து போதுமான விளக்கங்களையும் கொடுத்து புதிய சட்டத்தை அரசு கொண்டு வர எந்த தடையும் இல்லை’ என சொல்லி தீர்ப்பை தந்துள்ளது. நீதிமன்றமே சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என சொல்லியுள்ளது. ஆனால் ஆளுநர் அதிகாரம் இல்லை என்கிறார். இந்த சட்டத்தை மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்புவது என்ற முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.