நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கடந்த 23ஆம் தேதி பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது.
அப்போது விஜய் பேசுகையில், “நமது கொடிக்கு பின்னாடி ஒரு இன்ட்ரஸ்டிங்கான வரலாற்று குறிப்பு இருக்கிறது. அது என்னவென்று நீங்கள் ஒரு நாளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்கன்னு சொன்னேன் அல்லவா, அந்த நாளில் நம் கட்சியின் கொள்கை, செயல்திட்டங்கள் என்ன என சொல்லும் பொழுது இந்த கொடிக்கான விளக்கத்தை நான் சொல்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். விஜய் சொன்ன அந்த நாள், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடாக தான் இருக்கும் என்று பல்வேறு மத்தியில் பேசப்பட்டது. இருப்பினும், மாநாடு நடைபெறும் தேதி குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.
இதற்கிடையில், நடிகர் விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியிருப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ‘2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் உங்களோடு கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “உங்களுக்கு முன்னாடி சிக்கியிருக்கிறேன். தினந்தோறும் இந்த கேள்வியை தான் கேட்கிறீர்கள். செப்டம்பர் 22ஆம் தேதி தம்பி விஜய் மாநாடு போட்டு கட்சியை அறிவிப்பார் அல்லவா அப்போது இந்த கேள்வியை அவரிடம் கேளுங்கள்” என்று கூறினார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கான தேதி குறித்து எந்தவித அறிவிப்பும் வராத சூழ்நிலையில், சீமான் அந்த தேதியை கூறியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.