ஒவ்வோர் ஆண்டும் வனத்துறை மற்றும் அறநிலையத் துறையைச் சேர்ந்த யானைகளுக்கு முதுமலையில் 48 நாட்களுக்கு புத்துணர்வு முகாம் நடக்கும். அதன்படி பிப்ரவரி 6ஆம் தேதி, வனத்துறையைச் சேர்ந்த யானைகளுக்கான புத்துணர்வு முகாமைத் தொடங்கிவைக்க வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெப்பக்காடு வந்திருந்தார். பத்திரிகையாளர்கள் மற்றும் கட்சியினர் திரண்டிருந்த நேரத்தில் தனது செருப்புகளின் பக்கிளைக் கழற்றுவதற்காக, பழங்குடியினச் சிறுவர்களை "டேய், வாங்கடா இங்க' என அழைத்தார்.
அவர்கள் செருப்பைக் கழட்டிவிடும் காட்சி ஊடகத்தினரால் பதிவுசெய்யப்பட்டு தமிழகமெங்கும் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. பேரனைப் போல நினைத்தே சிறுவனை செருப்பைக் கழட்டச் சொன்னதாக அமைச்சர் சமாளித்தார். ஆனாலும், தனக்கு நேர்ந்த அவமரியாதை தொடர்பாக மசினகுடி காவல் நிலையத்தில், அமைச்சர் சீனிவாசன் மீது புகார் கொடுத்துள்ளார் மாணவன் கேத்தன். சிறுவன் கொடுத்த புகாரால் அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.