ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டை அணிந்தும் சேலை அணிந்தும் 27ம் தேதி நடந்த சட்டப்பேரவையில் கலந்துகொண்டனர். பாஜகவுக்கும் மோடிக்கும் எதிராக முழக்கமிட்டபடி பேரவைக்குள் நுழைந்தனர். இவர்களுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி வரவில்லை. காலதாமதமாக தனியாக வந்தார்.
ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் வந்தார். அவர் அணிந்திருந்தது கருப்பு சேலை. இதைக் கண்டு பலருக்கும் அதிர்ச்சி. அவரிடம், "நீங்களுமா மேடம்?" என கருப்பு சேலை அணிந்திருப்பதை பலரும் கேட்க, அப்போதுதான் காங்கிரஸின் கருப்பு ஆடையின் பின்னணி அறிந்து, "அய்யய்யோ... நான் அணிந்தது அதற்காக இல்லை" என மறுத்துவிட்டு பேரவைக்குள் சென்றார்.
ராகுலின் தகுதி நீக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முயற்சித்தது. அதற்கு அனுமதி தரப்படாததால் வெளிநடப்பு செய்தது காங்கிரஸ். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தின் திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மோடி அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய அமளியால் இரு அவைகளும் முடங்கின. பின் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தி சிலை அருகே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டமும் நடத்தின.