காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை மாற்றிய விசயத்தில் காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் கடந்த 15 ஆம் தேதி அன்று சத்தியமூர்த்தி பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கட்சிக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு உண்டாகி அடிதடி ஏற்பட்டு 3 பேருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூபி மனோகரனை இடைநீக்கம் செய்ய 62 மாவட்ட தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அது ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், “நடைபெறவுள்ள 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தப்பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கடந்த நவம்பர் 15, 16 ஆகிய இரு தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
முதல் நாள் கூட்டம் நடைபெறுகிற போது நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 6 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு முன்பாக முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் முக்கியத் தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் வருவதை தடுத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற அசம்பாவிதங்களுக்கு தாங்கள் (ரூபி மனோகரன்) தான் காரணம் என்று கூறி 62 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிற்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அவர்களும் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே, வருகிற நவம்பர் 24 ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தாங்கள் நேரில் ஆஜராகி நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ரூபி மனோகரனுக்கு அனுப்பிய நோட்டீஸில் கே.ஆர்.ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.