அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க வேண்டும் என்று இபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டி, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் இறுதித் தீர்ப்பிற்கு உட்பட்டது என்றும் கூறியுள்ளது. கர்நாடக சட்டமன்றத்தில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சின்னத்தில் இபிஎஸ் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய தேர்தல் ஆணையம் 10 நாட்கள் கால அவகாசம் கோரி இருந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் நிர்ணயித்திருந்த காலக்கெடு நாளையுடன் நிறைவு பெறுவதால் இன்று இந்திய தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ள நிலையில் இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.