2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதன்படி 20/04/2023 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட மானியக் கோரிக்கைகள் மற்றும் அவற்றின் மீது முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றின் மீதான விவாதத்திற்கு பதில் உரை மற்றும் வாக்கெடுப்பின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை கொடுத்து உரையாற்றினார்.
அப்போது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி எழுந்து பேப்பரை எடுத்து படித்தார். அப்போது அதிமுகவினர் அவருக்கு மைக் தரச்சொல்லி அமளி செய்தனர். தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது சபாநாயகர், “நேற்று எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது 2 மணி நேரம் மதிய உணவு கூட உண்ணாமல் ஜனநாயகத்தோடு இந்த அவை நடக்க வேண்டும் என்ற காரணத்திற்காக முழுமையாக இருந்தார். காலையில், 55 விதியின் கீழ் பேசுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என கேட்டார்கள். அதையும் கொடுத்துள்ளோம். அவர்கள் கூறும் காரணம் எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது நேரலை செய்யுங்கள் எனக் கூறினர். இந்த அரசு பொறுப்பேற்ற பின் கேள்வி பதில் நேரத்தை நேரலையாக செய்து வருகிறோம்.
ஆனால் அவர்கள் எங்களைக் காட்ட வேண்டும் இல்லையென்றால் பதிலுரைக்கு இருக்க மாட்டோம் என சொல்வது எவ்வகையில் நியாயம். எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பளித்து வருகிறோம். சட்டப்பேரவையில் அனைத்து அமைச்சர்களும் பதில் சொல்லும் நாளிலும் அமர்ந்திருந்துள்ளார்கள். வைக்கம் நிகழ்வுக்கு மட்டும் திருவனந்தபுரம் சென்றதைத் தவிர அனைத்து நாட்களிலும் இருக்கிறார்கள். சட்டமன்ற மாண்பைக் காப்பாற்ற வேண்டியது மிக முக்கியம். கேள்வி நேரத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட காரணத்தினால் அந்த சமயத்தில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் கருப்பண்ணன் ஆகியோர் பேசிக்கொண்டு இருந்ததை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது குறித்து காமராஜ் என்னிடம் கூறினார். தொலைக்காட்சியில் தங்களைக் குறை சொல்லி செய்தி வருவதாகவும் கூறினார். அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
முன்னாள் அமைச்சர்களின் மனதை புண்படுத்துகிறது. இப்படிப்பட்ட நிலைகள் வெளியில் செல்கிறது. அதனால் உறுப்பினர்களின் மாண்பைக் காக்க வேண்டும். அவையைக் காக்க வேண்டும். அவையில் பேசும் வார்த்தைகள் தவறாக வெளியில் சென்று தமிழ்நாட்டில் பதட்டமோ அமைதியின்மையோ ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல்வர் நிதானமாக சிந்தித்து செயல்படுகிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இந்த செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனக் கூறினார்.