மத்திய அமைச்சர்களை சந்தித்து பல கோரிக்கைகளை வைப்பதும், சில சர்ச்சைகளை உருவாகுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் அதிமுக ராஜ்யசபா எம்.பி.சசிகலா புஷ்பா!
வைகோவுக்கு எதிராக சமீபத்தில் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடுவிடம் சசிகலா கொடுத்த புகார் மனு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதே போல, ஈரோடு ரயில் நிலையத்திற்கு பெரியார் பெயரை வைக்க வேண்டும் என கனிமொழி பேசிய பேச்சுக்கு எதிராக, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயலை சந்தித்து, "ஈரோடு ரயில் நிலையத்துக்கு கொடிகாத்த குமரன் பெயரை வைக்க வேண்டும்" என கொடுத்த கோரிக்கையும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மத்திய மனித வளமேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்திருக்கிறார் சசிகலா புஷ்பா. இந்த சந்திப்பின் போது, " இந்தியா முழுவதும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் மதிய உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும். இந்தியாவிற்கே முன்மாதிரியாக இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தியவர் காமராஜர். இதனையடுத்துதான், மத்திய அரசு இதனை அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வந்தது. அதனால் அந்த திட்டத்துக்கு காமராஜரின் பெயர் வைப்பதுதான் சரியாக இருக்கும் " என சொல்லி, அது குறித்த கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார் சசிகலா புஷ்பா.
கோரிக்கை மனுவை படித்துப் பார்த்துவிட்டு, "பிரதமரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன்" என பதிலளித்துள்ளார் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.