Skip to main content

சசிகலா - ஓபிஎஸ் மகன் சந்திப்பு! ரகசியங்களை அறிய எடப்பாடி முயற்சி! 

Published on 01/04/2022 | Edited on 01/04/2022

 

Sasikala-OPS son meeting! Edappadi try to know the secrets!

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சின் இளைய மகன் ஜெயபிரதீப், சசிகலாவை சமீபத்தில் சந்தித்து பேசியுள்ள சம்பவத்தை கேள்விப்பட்டு இது குறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சமையல் பணியாளராக சுமார் 30 ஆண்டுகாலம் இருந்தவர் ராஜம்மாள். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி கடந்த வாரம் இயற்கை எய்தினார் ராஜம்மாள்.


ராஜம்மாளின் மறைவு சசிகலாவை பெரிதும் பாதித்தது. ஏனெனில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் பசியையும் ருசியையும் அறிந்தவர் ராஜம்மாள். அவரது சமையல் பக்குவம் ஜெயலலிதா – சசிகலாவை ரசிக்க வைப்பதுண்டு. அதனாலேயே, போயஸ் கார்டனில் பல மாற்றம் பல சந்தர்ப்பங்களில் நடந்திருந்தாலும் ராஜம்மாள் மட்டும் மாற்றப்பட்டதே இல்லை. கார்ட்னிலேயே இருந்தார் ராஜம்மாள். அதனால் அவரது மறைவில் மிகவும் கவலையடைந்தார் சசிகலா.


தனியார் மருத்துவமனையில் இருந்த ராஜம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி மரியாதை செய்ய விரும்பிய சசிகலா, மருத்துவமனைக்கு சென்றார். அவர் வருவதற்கு முன்பு மருத்துவமனையின் சூழல் எப்படி இருக்கிறது என்பதை அறிய அதிமுகவின் தென்சென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளரும் தனது விசுவாசியுமான வைத்தியநாதனை அனுப்பி வைத்தார் சசிகலா.

 

மருத்துவமனைக்கு வைத்தியநாதன் சென்ற அங்கிருக்கும் சூழலை சசிகலாவுக்கு தெரியப்படுத்தி விட்டு சசிகலாவை வரவேற்பதற்காக அங்கேயே காத்திருந்தார் வைத்தியநாதன். இந்த சூழலில், ஓபிஎஸ்சின் மகன் ஜெயபிரதீப், ராஜம்மாளின் உடலுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்த மருத்துவமனைக்கு வந்தார். மரியாதை செலுத்த ஓபிஎஸ் தான் தனது மகனை அனுப்பி வைத்திருக்கிறார்.

 

Sasikala-OPS son meeting! Edappadi try to know the secrets!

 

மருத்துவமனைக்கு வந்த ஜெயபிரதீப், ராஜம்மாளின் உடலுக்கு உடனே அஞ்சலி செலுத்தச் செல்லவில்லை. ஒரு அறையில் காத்திருந்தார். அஞ்சலி செலுத்த வந்தவர் ஏன் அறைக்குள் நுழைந்து கொண்டார் என அங்கிருந்த அதிமுகவினருக்கு சந்தேகம் வந்தது. அப்போது அதிமுகவினர் சிலர் ஜெயபிரதீப்பிடம் பேச்சுக் கொடுத்த போது, “சின்னம்மா சசிகலா வரப்போறாங்க. அவங்க வரட்டும். அவர்களோடு சேர்ந்து ராஜம்மாளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம்னு காத்திருக்கேன்” என்று சொல்லியிருக்கிறார். அதன்பிறகு சுமார் 2 மணி நேரம் கடந்த நிலையில், மருத்துவமனைக்கு சசிகலா வந்தார். 

 

அவரை பார்த்து வணக்கம் சொன்ன ஜெயபிரதீப், ராஜம்மாள் உடலுக்கு சசிகலா அஞ்சலி செலுத்தியப் பிறகு அவர் அஞ்சலி செலுத்தினார். ஒரு மௌனமான சூழல் அங்கு நிலவிக்கொண்டிருந்தது. அதன்பிறகு சசிகலாவும் ஜெயபிரதீப்பும் 15 நிமிடம் தனியாக பேசிக்கொண்டிருந்தனர். ஒ.பி.எஸ். மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார் சசிகலா. அரசியல் தொடர்பாக சில விசயங்களை ஜெயபிரதீப்பிடம் சசிகலா பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த விவகாரம் இப்போதும் வெளி வரவில்லை. மிக ரகசியமாக பாதுகாக்கப்படுகிறதாம். 


இந்த சந்திப்பையும் ஓபிஎஸ் பையனிடம் 15 நிமிடம் தனியாக சசிகலா பேசியதையும் அறிந்து அதிர்ந்து போய்விட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ் மகனிடம் சசிகலா என்ன ரகசியம் பேசினார்? என்பதை அறிய இப்போது வரை முயற்சிக்கிறார். ஆனால், உண்மையான தகவல் மட்டும் அவருக்கு கிடைத்தபாடில்லை. 


ஒரு பக்கம் தனது மூத்த மகன் ரவீந்திரநாத் எம்.பி.யை டெல்லிக்கு அனுப்பி, பாஜக தரப்போடு நெருங்கிப் பழக அரசியல் சூட்சமங்களை போட்டுக் கொடுக்கிற ஓபிஎஸ், மற்றொரு புறம் தனது இன்னொரு மகன் ஜெயபிரதீப்பை சசிகலாவுடன் சந்திக்க வைத்து சில அரசியல்களை கையிலெடுக்கிறார் என்கிற பேச்சு அதிமுக மூத்த தலைவர்களிடம் எதிரொலிக்கச் செய்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்