சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதில் இன்னும் ஒரு மாதத்தில் ஒரு பெரிய விஷயம் நடக்கும் என்கிறது மன்னார்குடி வகையறா. சசிகலா குடும்பத்துக்கு எதிராக பா.ஜ.க.வினர் வருமான வரித்துறையை ஏவி விட்டு சசிகலா இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு பினாமி சொத்துகள் சேர்த்திருக்கிறார் என கோர்ட்டில் சமர்ப்பித்தார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அப்பொழுது முதலமைச்சரான ஓ.பி.எஸ். மூலமாக 140 கோடி ரூபாய் அளவிலான செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றினார்கள் என எகிறி அடிக்கிறார்கள்.
அது தவிர, சசிகலா மேல் 91-96 காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. போதாக்குறைக்கு அபராதம் கட்டாத பிரச்சனை வேறு. இதில் ஏதோ ஒன்றைப் பயன்படுத்தி சசிகலாவை சிறைக்குள்ளே வைத்திருக்கும் முயற்சியை பா.ஜ.க. மேற்கொள்ளும் என்கிறார்கள் சசிகலாவை எதிர்க்கும் அ.தி.மு.க.வினர். ஆனால் சசிகலா தரப்பினரோ, இதற்கு வேறுவிதமான விளக்கத்தை அளிக்கிறார்கள்.
சசிகலா குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையை ஏவி, அவர் 2,000 கோடி ரூபாய் பினாமி சொத்து சேர்த்தார் என வருமான வரித்துறை சொன்னது. ஆனால் பினாமி சொத்துகளை வைத்திருப்பதாக சொல்லப்படும் ஒருவர் கூட சசிகலாவை நான் நேரில் பார்த்தேன், அவரிடம் பேசினேன் என சாட்சியமளிக்கவில்லை. எனவே அதை அப்பீலில் முறியடிக்க முடியும். சசிகலாவுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் நடக்கும் அத்தனை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளிலும் தடையாணை பெறப்பட்டுள்ளது. அந்த தடையாணையை உடைத்துவிட்டு வழக்கு நடத்தி சசிக்கு தண்டனையை வாங்கி தந்தாலும் அதற்கும் அப்பீல் போக வழி உள்ளது.
சசிகலாவின் சிறைத் தண்டனையை நீடிக்கும் வழக்கு என்பது "பெங்களூரு சிறையில் சிறை விதிகளை மீறினார்' என்ற வழக்குதான். அந்த வழக்கு இன்னமும் நீதிமன்றத்துக்கே செல்லவில்லை. குன்ஹா விதித்த அபராத தொகையான பத்து லட்சத்தை சசிகலா கட்டினால் குற்றவாளி என சசிகலா ஒத்துக் கொண்டதாகிவிடும். அது எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகளை பாதிக்கும். அபராதம் கட்டவில்லையென்றால் சசியின் சொத்துகளை விற்க குன்ஹா உத்தரவிட்டுள்ளார். அதை எடப்பாடி அரசு செய்யட்டும்.
சட்டப்படி 2021-ம் வருடம் பிப்ரவரி 14-ம் தேதி விடுதலையாக வேண்டும். இதே வழக்கில் 40 நாட்கள் ஜெ.வும் சசியும் சிறை யில் இருந்த 35 நாட்களில், சசி பரோலில் வந்த 17 நாட்கள் கழிந்துவிடும். சசிகலா அடுத்த மாதம் சொத்துக் குவிப்பு வழக்குக்கெதிராக க்யூரேட்டிவ் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சசிக்கு நல்ல தீர்ப்பு வரும். அதனால்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா, திவாகரனின் மகன் திருமணத்திற்கு வாழ்த்து செய்தி அனுப்பினார் என்கிறார்கள்.