Skip to main content

சசிகலா, தினகரன் குடும்பத்தினர்தான் ஜெ. வுக்கு  ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்றார்கள்!   அமைச்சர் சீனிவாசனின்   பகீர் குற்றச்சாட்டு!!

Published on 11/11/2018 | Edited on 11/11/2018
s

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு கூடிய விரவில் இடைத்தேர்தல் வர இருக்கிறது.  இந்த நிலையில் தான் ஆளும் கட்சியான அஇஅதிமுக சார்பில்  செயல் வீரர்கள் மற்றும்  வீராங்கனைகளின்  ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டையில்  நடைபெற்றது.    

       இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்  மருதராஜ்  தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன் மற்றும் பாண்டியன் வரவேற்றார்.     இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

 

       இக்கூட்டத்தில் பேசிய  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பணத்தை சசிகலா மற்றும் டிடிவி. தினகரன் குடும்பத்தினர் கொள்ளையடித்துவிட்டு  ஜெயலலிதாவை வீட்டில் வைத்து சர்க்கரை நோயை அதிகமாக வரச் செய்து  ஸ்லோ பாய்சன் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக  கொலை செய்த கும்பல் தான் தினகரன் கும்பல். அப்படி பட்ட கும்பல் பின்னால் சென்றுள்ள  நிலக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதுரை தான் துரோகி. அவருக்கு நிலக்கோட்டை மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.  

 

 அதுபோல் தினகரனும் ஸ்டாலினும் சேர்ந்து இந்த ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று நினைத்தார்கள்.  அது முடியவில்லை. பத்து வருட காலம் தனக்கு துரோகம் செய்த காரணத்தினால் ஒரு வழக்கில் தினகரனையும் ஜெயலலிதாவையும்  சிக்கவைத்து விட்டதாக கலைஞரிடம் நயவஞ்சகமாக பணத்தை கொடுத்து சிக்கவைத்து  ஏமாற்றிவிட்டார். எனவே இதை பார்த்து அம்மா, நீ என் மூஞ்சிலேயே முழிக்க வேண்டாம்.   துரோகி போயஸ் கார்டன் பக்கம் வரவே கூடாது எனவும் கூறினார். அம்மா சொன்னது போல தினகரன் துரோகிதான். 

 

 சண்டாள பாவிகள் நம்முடைய தெய்வத்தை வீட்டில் வைத்து சக்கரை வியாதி ஏற்றி  ஸ்லோ பாய்சன் அதாவது மெதுவாக செலுத்தக்கூடிய விஷத்தை வைத்து கொலை செய்த கும்பல் தான் தினகரன் கும்பல். ஆனால் இன்று உத்தமர்களை போல நான்தான் எம்ஜிஆர் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். அதையும் நம்பி தங்கத்துரை அவர்கள் பின்னால் சென்று இருக்கிறார் என்றால் அதை மக்களாகிய நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆட்சிக்கு துரோகம் செய்த நிலக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கத்துரை  இந்த ஆட்சி மூலம் கிடைத்த சம்பளம் சலுகைகள் உள்ளிட்டவற்றை இங்கே இருக்கக்கூடிய அதிமுக நிர்வாகிகளிடம் ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும்.  அப்படி செய்தால் நல்லவன் என்று சொல்வோம். நீங்கள் இங்கு வந்து அத்தனை சுகத்தையும் உறிஞ்சி குடித்து விட்டு இன்று துரோகியின் பின்னால் சென்றால் எப்படி நல்ல தீர்ப்பு வரும்.

 

 வரக்கூடிய இந்த இடைத்தேர்தல் மூலம் ஒரு நல்ல  சட்டமன்ற உறுப்பினரை நிலக்கோட்டையில் உருவாக்குவோம்.  இன்றைக்கு திரைப்படத்தில் யார் எது சொன்னாலும்  அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இன்றைக்கு ஒட்டு மொத்தமாக அத்தனை நடிகர்களும் சேர்ந்து இந்த ஆட்சியை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன..? திரைப்படத்தில் ஊழலைப் பற்றி பேசுபவர்கள் ஊழல் இல்லாமல் இருக்கவேண்டும் அல்லவா.. இன்றைக்கு நடிகர்கள் வாங்குகின்ற சம்பளம் எவ்வளவு. அவர்கள் கட்டுகின்ற வரி எவ்வளவு இதைப்பற்றி தெளிவுபடுத்தினால் இன்றைக்கு நடிகர்கள் பற்றிய அனைத்து உண்மையும் வெளி வந்து விடும். அரசாங்கத்தை எதிர்ப்பது என்ற பெயரில் யாரோ போடுகின்ற படத்தில் நடித்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு நடித்துவிட்டு கருத்தைச் சொல்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்.

  இந்த அதிமுக அரசின் சார்பில் நிலக்கோட்டை ஒன்றியத்திற்கு 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வளர்ச்சி திட்ட ங்களை அதிமுக அரசு செய்து முடித்திருக்கிறது. அதேபோன்று 30 கோடி க்குமேலாக வத்தலகுண்டு ஒன்றியத்திற்கும் அதிமுக அரசு பல திட்டங்களை சாலை வசதிகள் அடிப்படை வசதிகள் போன்றவைகள் செய்துள்ளது. எனவே நிலக்கோட்டை சட்டமன்ற  உறுப்பினர் இல்லாவிட்டாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து வசதிகளையும் அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசு செய்து கொண்டுதான் இருக்கிறது. எனவே அதிமுக ஆட்சிக்கு  யாரை எல்லாம் நம்பி சட்டமன்ற உறுப்பினராக ஜெ வெற்றி பெறச் செய்தார் களோ அந்த 18 பேரும் இன்றைக்கு இந்த ஆட்சிக்கு துரோகம் இழைத்து விட்டு துரோகிகள்  பக்கம் சென்று இருக்கிறார்கள். எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கும் வேட்பாளருக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

 
இக் கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனி செத்தாலும் பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்க மாட்டோம்” - திண்டுக்கல் சீனிவாசன்

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

Dindigul Srinivasan says criticized tamilnadu bjp party

 

அ.தி.மு.க கட்சியின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் நேற்று (17-10-23) கொண்டாடப்பட்டது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் அ.தி.மு.க சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். 

 

அப்போது அவர், “சைத்தான் என்று சொல்லக்கூடிய பா.ஜ.க கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வந்து உங்களை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றால், கூட்டணியில் இருந்து விலகியதற்கு எடப்பாடி பழனிசாமி ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார். இஸ்லாமியர்களை வெறுக்கின்ற பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று இஸ்லாமிய சகோதரர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு சில, சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த கூட்டணியில் இருந்து விலகாமல் இருந்து வந்தோம்.

 

வாஜ்பாய் அமைச்சரைவில் தி.மு.க. கூட்டணி வைத்து அதன் பின்பு சோனியா காந்தி அமைச்சரவையில் காங்கிரஸில் இணைந்தார்கள். தி.மு.க.வை இஸ்லாமியர்கள் ஏற்றுவிட்டார்கள். ஆனால், எங்களை வெறுத்து விட்டீர்கள். அதற்கு காலம் பதில் சொல்லும் என்பதற்கிணங்க பா.ஜ.க.வில் இருந்து விலகி, இனிமேல் அதில் இணைய மாட்டோம் என்று நாங்கள் சொல்லிவிட்டோம். ஆனால், தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து விடுவார்கள் என்று பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். 

 

தமிழகத்தில் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று நாங்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். அதே போல், அடுத்த பிரதமர் மோடி தான் என்று இங்கு இருக்கக்கூடிய பா.ஜ.க தலைவர்கள் கூறியிருந்தார்கள். அதன்படி தான் நாங்கள் அவர்களோடு இருந்தோம். மேலும், அண்ணாமலை தான் அடுத்த முதல்வர் என்று செல்கிற இடமெல்லாம் அவர்கள் சொல்லி கொண்டு இருந்தார்கள். அதில் தவறும் ஒன்றும் இல்லை. ஏனென்றால், பத்து பேர் இருக்கக்கூடிய கட்சியில் கூட அடுத்த முதல்வர் நான் தான் என்று சொல்வார்கள். அது போல், தான் மக்கள் ஓட்டு போட்டால் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிட்டால், நாங்கள் முதல்வர் ஆவதற்கு அவர்களை எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காக தான் ஆண்மையோடு நாங்கள் வெளியே வந்தோம். 

 

சில வாரங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அரசியல் சார்ந்து பல்வேறு விஷயங்களை பற்றி பேசி வந்தார். அதன் பிறகு அடுத்த 15 நாட்களில் சில சூழ்நிலைகள் மாறுகிறது. அ.திமு.க முக்கிய தலைவர்கள் சிலர் சேர்ந்து பா.ஜ.கவை சேர்ந்த நட்டாவை சந்தித்து இனிமேல் உங்களுடன் கூட்டணி வைப்பது இல்லை என்று சொல்லி வந்தார்கள். மேலும், அதில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் தான் ஆட்சிக்கு வரமுடியும். அதனால், அந்த தேர்தல் எங்களுக்கு முக்கியமான தேர்தல் என்று கூறிவிட்டு வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் அ.தி.மு.க.வுக்கு இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் என்ன? பா.ஜ.க.வால் அதிமுக கட்சி வளரவில்லை. நம்மால் தான் பா.ஜ.க வளர்ந்திருக்கிறது. அதனால் தானே கூட்டணி வைத்தார்கள். அதனால், எங்களை முழுமையாக நீங்கள் நம்ப வேண்டும். இனிமேல், நாங்கள் செத்தாலும், பா.ஜ.க பக்கமோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருக்கின்ற யார் பக்கமும் சேர மாட்டோம் என்பதை கூறிக் கொள்கிறேன்” என்று கூறினார். 

 

 

Next Story

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில்  அனுமதி

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

admit at Dindigul Srinivasan Hospital

 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த அதிமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன், தற்போது திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக உள்ளார். இந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் சீனிவாசனின் உடலில் கட்டி இருப்பதாகவும், அதனை அகற்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.