அதிமுகவில் பதவி யுத்தம் உச்சத்தில் இருக்கும் நிலையில் சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். சசிகலா ஒரு பக்கம் நான் தான் பொதுச் செயலாளர் என்று சொல்லி வரும் நிலையில், நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பி.எஸ்-ம், நான் தான் தற்காலிக பொதுச் செயலாளர் என்று ஈ.பி.எஸ்-ம் கூறிக்கொண்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் சில நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வழியாக சசிகலா காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது காவராப்பட்டு கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற வைத்திலிங்கம் மண்டபத்திலிருந்து கிளம்ப போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது சசிகலா - வைத்திலிங்கம் எம்.எல்.ஏ சந்திப்பு நடு ரோட்டில் நடக்கிறது. அப்போது வைத்திலிங்கம் அருகில் நின்ற ஒருவர், ‘இன்று அண்ணனுக்கு பிறந்த நாள்’ என்று கூற, ‘அப்படியா!’ என்று மகிழ்ச்சியோடு வாழ்த்துச் சொன்ன சசிகலா, வைத்திலிங்கத்திற்கு சாக்லெட் கொடுத்தார்.
தொடர்ந்து தனியாக பேசிய போது குடும்பத்தினர்கள் பற்றிய நலம் விசாரிப்புகளுக்கு பிறகு கட்சி நிலவரம் குறித்து கேட்ட சசிகலாவிடம் “சுப்ரீம் கோர்ட்ல நமக்கு சாதகமான தீர்ப்பு வரும்” என்று வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். அதிமுகவில் பதவி யுத்தம் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் சசிகலா - வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. சந்திப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.