இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் வர போகிறார்கள் என்கிற கேள்வியோடு தேர்தல் களம் சூடுபிடிக்க பறக்க ஆரம்பித்துள்ளது. மோடியா ? ராகுலா ? என்கிற விவாதம் இந்தியா முழுவதும் நடைபெற்றுவருகிறது.
தேர்தல் களம் என்றாலே அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் எப்போதும் தூள் பறக்கும், தலைவர்களின் பேச்சை கேட்பதற்காக தொண்டர்கள் கூட்டம் காத்துக்கொண்டிருப்பார்கள். தலைவரை பார்த்த மகிழ்ச்சியோடு அவரிடம் கை கொடுத்து விட வேண்டும் என்கிற ஆர்வமும் தொண்டர்களிடம் இருக்கும். சிலர் தங்கள் பிறந்த குழந்தைகளை தலைவரிடம் காண்பித்து பெயர் வைக்க சொல்லி சந்தோஷப்படும் தொண்டர்களும் இருப்பார்கள்.
எப்போதும் கட்சியின் தலைவர்கள், சினிமா புகழ் நடிகர்கள்தான் கூட்டம் கூடும் இடத்தில் பெயர் வைப்பார்கள். ஆனால் திருச்சி எம்.பி. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பிரச்சாரத்திற்கு சென்றபோது ஒரு குழந்தைக்கு பெயர் வைத்த சம்பவமும் நடந்திருக்கிறது.
திருச்சி எம்.பி. தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான். புதுக்கோட்டை மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் என்பதால் புதுக்கோட்டையும், திருச்சிக்கும் தொடர்புடையவர் என்பதாலும், இரண்டு முறை மேயராக திருச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதாலும் அவரை தேர்தலில் நிற்க வைத்திருக்கிறார்கள்.
சின்னம் ஒதுக்குவதற்கு முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தில் இரண்டு தொகுதிகளை முடித்தவர், இன்று அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட, குறவர் காலனியில் வாக்கு சேகரித்தபோது நரிக்குறவர் தம்பதியினர் தங்கள் குழந்தையை கொண்டு வந்து பெயர் வைக்க சொல்லி வேட்பாளர் சாருபாலாவிடம் கொடுத்தனர். உடனே சந்தோஷத்துடன் பிறந்த குழந்தைக்கு தினகரன் என்று பெயர் சூட்டினர். எப்போதும் தலைவர்கள்தான் குழந்தைக்கு பெயர் வைப்பார்கள். இங்கே வேட்பாளர் தலைவர் பெயரை குழந்தைக்கு வைத்திருக்கிறார் என்று சொல்லி சந்தோஷப்பட்டனர்.