
கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்துவிட்டு நாளை ஈஷாவில் நடைபெற உள்ள சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக இன்று அவர் கோவை வரவுள்ளார். விமானம் மூலம் வரும் அமித்ஷாவை வரவேற்க பாஜகவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.
அதேநேரம் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையைக் கண்டித்து தந்தை திராவிட பெரியார் கழகத்தினர் கோவை பீளமேடு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தி திணிப்பு மற்றும் மீனவர்கள் கைதை கண்டித்தும், மாநில அரசுக்கான கல்வி நிதியை தர வலியுறுத்தியும் கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவையில் அமித்ஷா வருகையை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை தலைமையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அமித்ஷா கோவை வரவுள்ள நிலையில் அதேநேரம் சேலத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் கோவை வந்து, பின்னர் கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை செல்ல உள்ளார். இதனால் கோவை வர இருக்கும் முதல்வரை திமுகவினர் வரவேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் கோவை விமான நிலைய சாலையில் போட்டிப்போட்டுக்கொண்டு பாஜகவினரும், திமுகவினரும் கொடிகளை கட்டியுள்ளனர்.