2000 நோட்டுகள் திரும்பப் பெறுவது குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி செப்.30 ஆம் தேதி வரை மட்டுமே 2000 செல்லும் என்றும் அதுவரை பொதுமக்கள் வங்கிகளில் பணத்தை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஏற்கனவே ஒருமுறை ரூ.500, 1000 செல்லாது என சொல்லி ஒட்டு மொத்த மக்களையும் கொலை செய்ததுதான் மிச்சம். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. இதன் மூலம் கருப்புப் பணம் ஒழியும் என சொன்னார்கள். எந்த பணமும் ஒழியவில்லை. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி சம்பாதிக்கும் அளவுக்கு ஊழல் தான் நடந்து வருகிறது. லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க வேண்டும் என்று வந்த பண மதிப்பிழப்பால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இப்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாலும் எந்த பிரயோஜனும் இருக்கப் போவது இல்லை. இது ஒரு கண் துடைப்பு நாடகம்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் வென்றுள்ளது. எப்போதும் ஒரு ஆட்சி இருந்தால் அடுத்த தேர்தலில் வேறு ஒரு ஆட்சி வர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஏற்கனவே பாஜக ஆட்சியில் இருந்தது. இப்போது காங்கிரஸ் வென்றுள்ளது. காங்கிரஸ் அதிகமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” எனக் கூறினார்.