தேர்தல் திருவிழா உட்சத்தில் களைகட்டிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், ஆட்களைத் திரட்டிக் கூட்டத்தைப் பிரம்மாண்டப்படுத்துவது, தாரை தப்பட்டைகள், கெண்டை மேளம், அதையும் தாண்டி ஸ்பெஷலாக கேரள கதகளி ஆட்டத்தையே கொண்டு வந்து இறக்கி தங்களுக்கான மாஸ் காட்டுவது என்பன நடைமுறையானதோடு தங்களின் வறுமையற்ற கரன்சிச் செழுமையைக் கட்டியம் கூறுவதாகவே அமைகிறது.
இன்ஸ்டண்ட்டான கூட்ட ஏற்பாடு என்றால் இப்போதெல்லாம் கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டத்தைச் சேர்க்க பரபரக்க வேண்டியதில்லை. காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு அலையவேண்டாம். காலையில் 11 மணிக்கு கூட்டம். இத்தனைபேர் வேண்டும். மதியம் மூன்று மணிக்கு நிகழ்ச்சியா, இரவு 7 மணியளவில் பெரிய தலைவர்களின் பொதுக் கூட்டமா மெனக்கெட வேண்டியதில்லை. இப்படி கால நேரத்தைச் சொல்லி, தேவையான நபர்களுக்கான தொகையையும் கமிசனையும் எண்ணிக் குத்தகைதாரர்களிடம் வெட்டிவிட்டாலே போதும், சொன்ன நேரத்துக்குக் கூட்டத்தைக் கொண்டு வந்து இறக்கி விடுவார்கள். இது போன்று காலை மாலை என்று ஷிப்ட் போட்டு ஆட்களைத் திரட்டுகிற கமிசன், காண்ட்ராக்ட் அண்மைக் காலங்களில் தொழிலாகவே நடத்தப்படுகிறது. எங்களுக்கு அது பற்றிய கவலையே இல்லைங்க என்கிறார் சங்கரன்கோவில் நகரின் முக்கிய அரசியல் கட்சியின் அந்தப் பொறுப்பாளர்.
இந்த வகையான பிரச்சாரங்களை ஏற்றுக் கொள்வது மரபாகிப் போனதுடன் தேர்தல் ஆணையமும் இது போன்ற நிகழ்ச்சிகளின் செலவீனக் கணக்குகளைத் தொடர்புடைய வேட்பாளர்களின் கணக்குகளில் ஏற்றுவதையே குறியாகக் கொண்டுள்ளது. அது போகட்டும். இப்போது நடக்கிற அந்த விஷயத்திற்கு வரலாம். சங்கரன்கோவில் தொகுதி அ.தி.மு.க.வின் சிட்டிங் அமைச்சரான ராஜலட்சுமி தரப்பினர் தேர்தல் வேலைகளில் தற்போது புதிய யுக்தியைப் பயன்படுத்தியுள்ளனர்.
13 முதல் 16 வயது சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். அ.தி.மு.க.வின் “ஜெ” படத்துடன் வேட்பாளர் ராஜலட்சுமியின் படத்தையும் கொண்ட இலைச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்படியான ஆள் உயர விளம்பர ப்ளக்ஸ் போர்டுகளைப் பெல்ட் போட்டு இணைத்து சிறுவர்களின் இடுப்பில் கட்டி முதுகில் சுமந்து கொண்டு வீதி வீதியாய் தெருத் தெருவாகப் பிரச்சாரம் செய்யவும், மக்களின் கவனத்தை ஈர்க்கும்படியாக அலைய விடப்பட்டிருக்கிறார்கள். பள்ளிக்குழந்தைகள் புத்தக மூட்டையை முதுகில் சுமந்து கொண்டு போகிறதைப் போன்று, இது போன்ற ப்ளக்ஸ் போர்டுகளைச் சுமந்து செல்கிற சிறுவர்களைத் தொகுதியில் காணமுடிகிறது. ஆனால் மக்களின் பார்வையிலோ, தேர்தல் அல்லாத எதிர்மறை எண்ணங்கள் தான். சின்னப் பசங்கள இப்புடியா அலைய விடுறது என்ற பரிதாப சிந்தனையே ஓடுகிறது.
தெருவில் போர்டைச் சுமந்து அலைகிற அந்தச் சிறுவர்களிடம் பேசினோம், “நா வெங்கடேஷ், அவன் வீரா, அடுத்தவன் சூர்யா. ஒரு பையன் 9ம் வகுப்பு. இன்னொருத்தன் 11ம் வகுப்பு படிக்கிறாங்க. எங்களப் போலச் சிறுவர்கள் பத்துக்கும் மேல இப்புடி அ.தி.மு.க. பிரச்சாரத்தில் போறோம். காலை 7 முதல் பனிரெண்டு மதியம் 4 மணி முதல் 8 மணிவரை இப்படி வீதி வீதியாய் சுமந்துகிட்டுப் போய்வரனும். சாப்பாடு போக, ஒரு பையனுக்குக் காலைல ஐந்நூறு ரூவா, மதியம் ஐந்நூறு ரூவா குடுக்குறாக. தேர்தல் வரைக்கும் நாங்க இந்த வேலைக்கி இருக்கோம்யா. கரோனா; ஸ்கூல் போவ முடியல. அப்பா இல்லாத பையங்க, சிலரு வீட்ல அம்மா இல்லாத பையங்களும் இதுல இருக்காங்க. அடி மட்டப் பையங்கய்யா நாங்க. வீட்டுல அப்பா அம்மா கூலி வேலைல கிடைக்கிறது பத்தல. சம்பளம் கிடைக்கே. வீட்டுக்கு உதவுமேங்குற வயித்துப்பாடுதாம்ங்க இதுக்கு வந்திருக்கோம்” என்றனர் கண்கள் கசிந்த கரகரத்த குரலில்.
நமக்கோ காலை விட்டுப் பூமி உருவிப் போன உணர்வு. வேலைக்கோ, தன் சுயலாபம் பொருட்டான தேர்தல் பிரச்சாரத்துக்கோ யார், யாரை ஈடுபடுத்த வேண்டும் என்ற ஒரு அளவுகோல் இருக்கிறது. ஆனால் அந்த அளவுகோல், சட்ட நெறிமுறைகளனைத்தும் அரசியல் வாதிகளுக்குத் தூசுதான் போல. விதி மீறல் சட்டமீறல் கூடாது. தொகுதிக்கு ஆறு பறக்கும்படைகள், அப்ஸர்வர்கள், தேர்தல் அதிகாரிகள் பணியாளர்கள், காவல் துறையினர் என்று ஆக்டபஸ் கரங்களைப் போன்ற கண்காணிப்பு சாதனங்களை கொண்ட தொகுதி தேர்தல் பார்வையாளர்களின் கண்களில், இது போன்ற சிறுவர்களைப் பணியமர்த்தியது மனித உரிமை மீறல் என்பது தென்படவில்லையா? குழந்தைகளைச் சிறுவர்களைத் தொழிலில் அமர்த்துவது குற்றம், என்கிறது தேசிய மனித உரிமை ஆணையம். சிறுவர்களின் வருமானம் தேசிய அவமானம் என்கிறது இந்தியா. இவைகள் ஏட்டளவிலிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.