அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கட்சியின் பெயரையும், கொடியையும் மாற்ற வேண்டும் என்று சமீபத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் நடிகர் எஸ்.வி.சேகர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். எஸ்.வி.சேகர் ஏதாவது பேசிவிட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து விடுவார் என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். பிஜேபி கட்சி எஸ்.வி.சேகரை ஒரு பொருட்டாகவே ஏற்று கொள்வதாக தெரியவில்லை. ஆகவே நாம் எஸ்.வி. சேகர் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது என்றார் அமைச்சர் காமராஜ்.
எஸ்.வி.சேகர் பேச்சுக்கு பலர் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், மீண்டும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "நான் பயப்படுபவன் கிடையாது. என்னை எல்லோருமே சொல்வார்கள், நீ ஒரு பிராமண சத்திரியன் என்று. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஜான் பாண்டியனில் இருந்து எல்லோருமே என்னுடைய நண்பர்கள்தான். எனக்கு ஏதாவது ஒரு பிரச்சனையென்றால் ஓடிவந்து குரல் கொடுக்கக்கூடியவர் மீனவ சங்கத் தலைவர் அன்பழகன். அதுபோல நிறைய பேர் இருக்கிறார்கள்.
பாஜக பதவிக் கொடுக்கவில்லை என்பது எனக்கு வருத்தமே கிடையாது. என்னைப் பொறுத்தவரை மோடி அரசாங்கம் நடைபெற ராமருக்கு அனில் மாதிரி உதவி செய்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பது மோடிக்கு தெரியும்.
நீங்கள் ஏன் பிரச்சாரத்திற்கு வரவில்லை என சில பேர் கேட்கிறார்கள். பிரச்சாரத்திற்கு கூப்பிட்டால் வரப்போகிறேன், கூப்பிடாமல் எப்படி போவது. அடையாளமே தெரியாத யாரோ ஜீப்பில் ஏறி பேசிக்கொண்டு போவார்கள். அடையாளம் தெரிந்த நான் நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு பின்னால ஓட முடியுமா? போனில் நான் சொன்னாலே ஒரு 5 ஆயிரம் ஓட்டு மாறிப்போகக்கூடிய அளவுக்கு செல்வாக்கு எனக்கு இருக்குன்னு எனக்கு தெரியும். ஆகவே எந்த இடத்தில் எங்க பேசனுமா அங்க பேசுவேன்.
எல்லாவற்றும் மேல் நூறு சதவீதம் நான் கடவுளை நம்புகிறேன். நான் பயப்படுபவன் அல்ல. பயந்தால் பொதுவாழ்க்கைக்கு வர முடியாது. என் வீடு ஐந்து முறை தாக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை பெட்ரோல் பாம். மூன்று முறை கல்லால் அடித்து தாக்கினார்கள். பயந்திருந்தால் முதல் தடவையே விட்டுட்டு போயிருப்பேன். நான் யார் என்பது எனக்கு தெரியும். சோ என்னை மோடியிடம் அறிமுகம் செய்து வைத்தார். மோடிதான் என்னை பாஜகவில் சேர சொன்னார். குஜராத் மாநிலம் வருமாறு என்னை அழைத்தார். நான் சென்று வந்தேன். எனது நாடகத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.