காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை மாற்றிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் கடந்த 15 ஆம் தேதி அன்று சத்தியமூர்த்திபவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கட்சிக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு உண்டாகி அடிதடி ஏற்பட்டு 3 பேருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூபி மனோகரனை இடைநீக்கம் செய்ய 62 மாவட்டத் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அது ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி ரூபி மனோகரனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது. ரூபி மனோகரன் முறையாகப் பதிலளிக்கும் வரை அவரைத் தற்காலிகமாக நீக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி, “இதுவரையில் மாவட்டத் தலைவர்கள் 62 பேர் இணைந்து பெட்டிசன் கொடுத்துள்ளார்கள். இச்சம்பவம் குறித்துப் பேச 15 நாள் அவகாசம் வேண்டும் என தொலைபேசி வாயிலாகவும் எழுத்துப்பூர்வமாகவும் ரூபி மனோகரன் கேட்டார். அதுவரை அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.” எனக் கூறினார்.