தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.
மத்திய அமைச்சரவையில் இடம் வாங்காததற்கு அதிமுகவில் கோஷ்டி பூசலே காரணமா?
அமைச்சர் பதவி வாங்காத போதே பாஜக அடிமையா என்கிறீர்கள். அமைச்சர் பதவியை வாங்கினால் பாஜகவின் நிரந்தர அடிமை என்பீர்கள். நல்ல திட்டங்கள் வந்தால்போதும், மத்திய அரசிடம் இருந்து நிறைய நிதிகள் வாங்கி மக்களுக்கு நன்மை செய்தால் போதும்.
இந்த தேர்தலில் டிடிவி தினகரனின் நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?
அய்யோ என்னெத்த சொல்ல... யானை மாலை போட்டு ராணி ஆனமாதிரி நினைச்சு வந்தார். ஒரு படம் வந்தது பாத்தீங்களா... கே.ஆர்.விஜயாவுக்கு மாலை போட்டு ராணியாக்கிவிட்டுடும். அதைப்போல இவர் இணைந்தார். போகிற போக்கில் அவுங்க ஜெயிலுக்கு போவதற்கு முன்பு துணைப்பொதுச்செயலாளராக கையெழுத்துப்போட்டாங்களா இல்லையான்னு தெரியாது. நான்தான் துணைப்பொதுச்செயலாளர் என்று வந்துவிட்டார். தலைமைக்கழகத்திற்கு வந்தார். ஒரு ரூமில் சேரைப்பிடித்து உட்கார்ந்தார். உட்கார்ந்து அவருக்கு அவரே ஆர்.கே.நகரில் வேட்பாளராக அறிவித்தார். அப்பவே வில்லங்கம் வந்தது. கட்சிக்குள் பிரச்சனை வந்தது. எலெக்ஷன் நின்றது. அதுக்கப்புறம் அவராகவே அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார். அமைச்சர்களை ஒருமையில் பேச ஆரம்பித்தார். முதலமைச்சரையும் ஒருமையில் பேசும் அளவுக்கு வந்தார். எல்லோரும் ஒருமித்த முடிவு எடுத்து வெளியே தள்ளியாச்சி. கட்சிக்காரர்கள் எல்லோருக்கும் அவர் மேல வெறுப்பு. மீண்டும் ஒரு அடிமைத்தளத்திற்கு போக யாரும் விரும்பவே இல்லை. ஜெயலலிதா இருந்த வரை அவர்களை உள்ளே விடாமல் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
நீங்க சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தீர்களே?
அன்றைக்கு சசிகலா இருந்தார்கள். அவர்கள் பின்னால் ஒட்டுமொத்தமாக நின்றோம். அதற்கு பிறகு அவர்கள் குடும்பமே உள்ளே வந்தது. குடும்பமே உள்ள வந்ததை அவர்களால் தடுக்க முடியவில்லை. எத்தனை பேருக்கு யார் பதில் சொல்றது. அதனால் அவர்களை தடுக்கிற சக்தியாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அரசாங்கத்திற்குள் நுழைந்து அதிகாரம் செலுத்தக்கூடாத என்று தடுத்தார். உடனே நாங்கள்தான் கட்சி என்று தனியா கிளம்பிட்டார். அதனால் அவருக்கு பின்னடைவுதான்.
இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களில் எத்தனை பேர் சசிகலா குடும்பத்தின் தயவு இல்லாமல் அதிகாரத்திற்கு வந்தார்கள் என கேட்கிறார்களே?
நாங்கள் ஒரு உதவி செய்திருப்போம். அவர்கள் ஒரு உதவி செய்திருப்பார்கள். நாங்கள் உதவி செய்ததால்தான் அவர்கள் வந்தார்கள் என்று சொல்ல முடியாது. திறமை இல்லாதவர்கள் யாரும் அதிமுகவில் முன்னேறி வர முடியாது. ஜெயலலிதாவோட கவனத்தை கவர வேண்டும் என்றால் உழைத்தால்தான் முடியும். அப்போதுதான் அவர்கள் சீட் கொடுப்பார்கள். திறமை இருந்தால் எம்எல்ஏவாக, அமைச்சராக, எம்பியாக ஆக்கியிருப்பார்கள். கட்சியில் தகுதிக்கு ஏற்ப பதவிகள் வழங்கியிருப்பார்கள். எங்களால்தான் கட்சி, எங்களால்தான் கட்சி என்ற ஆணவப் பேச்சுதான் அவருடைய அழிவுக்கு காரணம். இவ்வாறு கூறினார்.