
தமிழ்நாட்டின் வளர்ச்சி எல்லோருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்திய கட்டுமான கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “சென்னையில் அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் புதிய நிறுவனங்களின் வருகை ஆகியவற்றால் அவர்களுக்கான நிலங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. எனவே அதற்கான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை உருவாக்கித் தரும் பொறுப்பை இந்திய கட்டுமான கூட்டமைப்பு ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை வைக்கிறேன்.
தமிழக அரசை பொறுத்தவரை பல்வேறு வாரியங்களின் வாயிலாகத் திட்டங்களைத் தீட்டி நகர்ப்புற வளர்ச்சிப் பணிகள் மற்றும் வீட்டு வசதித் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி எல்லோருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம். மேலும் அந்த வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்திய கட்டுமான கூட்டமைப்பு ஏழை எளியோருக்கு மலிவு விலையில் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். 2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற தமிழக அரசு செயல்படுகிறது” எனக் கூறினார்.