கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற சங்பரிவார ஊழியர்களின் உழைப்பு முக்கியக்காரணம் என பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில் பா.ஜ.க. 106 இடங்களிலும், காங்கிரஸ் 74 மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 39 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. தற்போதைய நிலையைப் பொருத்தவரை பா.ஜ.க. ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதால், பா.ஜ.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து பா.ஜ.க.வின் பொதுச்செயலாளர் ராம்மாதவ், ‘எடியூரப்பாவில் இருந்து கடைமட்ட தொண்டர்கள் வரை இந்த வெற்றிக்குக் காரணமானவர்கள். குறிப்பாக சங்பரிவார ஊழியர்கள் மகத்தான பணியில் ஈடுபட்டனர். அவர்களால்தான் கடலோர மாவட்டங்களில் முழுமையான வெற்றியை நம்மால் பெறமுடிந்தது. பிரதமரின் உழைப்பு வீண்போகவில்லை. தேர்தல் வியூகங்களில் அமித்ஷாவை மிஞ்ச யாராலும் மிஞ்சமுடியாது என்பதை கர்நாடக தேர்தல் வெற்றியின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.