ஆளுநரின் தொடர் சர்ச்சை பேச்சுக்கள் மற்றும் மசோதாக்கள் நிலுவை குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆளுநர் என்பதை தாண்டி அரசியல்வாதியாக செயல்படுகிறார்; தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை பொது வெளியில் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்; மக்களுக்காக சட்டத்தை இயற்றும் அதிகாரம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு இருக்கிறது; ஆளுநர் மதச்சார்பின்மைக்கு எதிராக பேசுகிறார்; தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துகிறார்; பேரவையை அவமதிக்கிறார் என தமிழக முதல்வர் பேரவையில் தெரிவித்திருந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது பேசிய தமிழக நிதித்துறை அமைச்சர், ஆளுநர் மாளிகையில் 11 கோடி ரூபாய் 32 லட்சம் ரூபாய்க்கு கணக்குகள் இல்லை என தெரிவித்தார். அவர் பேசுகையில், ''மொத்த செலவு என்ற தலைப்பில் 18 கோடியே 30 லட்சம் ரூபாய் ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த 18 கோடி ரூபாயில் 11 கோடி 32 லட்சம் ரூபாய் அவர்கள் கணக்கிற்கு மாற்றப்பட்டு எங்கே செலவிடப்பட்டது என்பது நம்முடைய கம்ப்யூட்டருக்கு அதாவது அரசுக்கு தெரியாது. இது விதிமுறை மீறல் என்று கூறுவேன். செப்டம்பர் 21 க்கு பிறகு இந்த தலைப்பில் நமக்கு வந்திருக்கக் கூடிய பில்களை எல்லாம் பார்க்கும் பொழுது யுபிஎஸ்சி மாணவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவதற்கு 5 லட்சம் ரூபாய், தேநீர் விருந்து 30 லட்சம் ரூபாய், ராஜ்பவன் ஊட்டியில் கலாச்சார நிகழ்ச்சிக்கு 3 லட்சம் ரூபாய் என செலவிடப்பட்டுள்ளது. இதெல்லாம் இந்த தலைப்பில் வந்திருக்கவே கூடாது. அதிலும் வேறு சில நபர்களுக்கு மாதம் மாதம் 58 ஆயிரம் ரூபாய் என 6 மாதத்திற்கு கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் பணம் சென்றுள்ளது'' என்றார்.