![eps](http://image.nakkheeran.in/cdn/farfuture/HGbwRxG4bEcDZlRdm_HX8j4Y30iU2ThHNw-c2cMTpvg/1657946488/sites/default/files/inline-images/t41_0.jpg)
பல்வேறு முட்டல் மோதல்களுக்கு பிறகு கடந்த 11 ஆம் தேதி வானகரத்தில் இரண்டாவது முறையாக அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி நீக்க, மறுபுறம் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களை ஓபிஎஸ் நீக்கி வருகிறார். அதேபோல் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க எம்.ஏ.ஏக்கள் கூட்டம் வரும் ஜூலை 17 ஆம் தேதி கூட இருப்பதாக கடந்த 13 ஆம் தேதி தகவல்கள் வெளியாகி இருந்தன. அ.தி.மு.க தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும், துணை குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நாளை (ஜூலை 17) சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஹோட்டலில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் மாலை 4 மணிக்கு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் எதிர்க்கட்சி தலைவர் இல்லம் அரசுடையது என்பதால் கட்சி சார்ந்த எம்.எல்.ஏக்கள் கூட்டம் அங்கு நடைபெறக் கூடாது என எதிர்ப்புகள் உருவான நிலையில், இடத்தை மாற்றி ஹோட்டலில் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார் எடப்பாடி.