Skip to main content

ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் ராஜினாமா... கமல்ஹாசன்

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

திண்டுக்கல் பூட்டு என்பது ஐவர் காலத்திலிருந்தே இருக்கிறது. அதற்கு தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளது. அதில் ஐந்து சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார். 

 

mnm

 

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதாகரன் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சின்னத்துரையை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு மக்களிடம் டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். 
 

அதன்பின் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், நமக்குள் இருக்கும் அன்பு 60 ஆண்டுகளாக தொடருகிறது. என் வாழ்வில் நடந்த சில விஷயங்கள் உங்கள் வாழ்வில் நடந்த சில விஷயங்கள் என்னை யோசிக்க வைத்தது. ஆனால் தாமதமாக அரசியலுக்கு வந்துவிட்டோம் அதற்காக மன்னித்துவிடுங்கள். நீங்களும் தாமதமாக விழித்துக் கொண்டீர்கள். அதற்கான தண்டனையைதான் நாம் இத்தனை காலமாக அனுபவித்து கொண்டிருக்கிறோம். இப்போது அது நம்மை விட்டு நீங்கும் நேரம் வந்துவிட்டது. டாக்டர் சுதாகரன் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.பி.யாக உங்களின் குரலை டெல்லியில் ஒலிக்க வைக்கப்போகும் நபர். நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சின்னத்துரை இருவரும் உங்களுக்காக சேவை செய்வார்கள். நான் விதியை நம்புபவன் அல்ல. மதியை நம்புகிறேன். உங்களுக்கு செய்ய வேண்டிய கடமை இருப்பதால்தான் நான் தற்போது களத்தில் இறங்கியுள்ளேன். 
 

இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக தான். தவிச்ச வாய்க்கு தண்ணீர் என்று நம் வழக்கில் ஒரு பழமொழி உண்டு. அதை கொடுக்க மறுக்கும் இந்த அரசாங்கம் அகற்றப்பட வேண்டும். பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். நம் அனைவரின் பெயரிலும் ரூ.1 லட்சம் கடன் உள்ளது. இவர்களுக்கு ஆட்சி செய்ய தெரியாது. ஆனால், அள்ள தெரியும். அவர்கள் செய்த தவறுதான் தற்போது அனைவர் பெயரிலும் ரூ.1 லட்சம் கடன் உள்ளது.
 

 
பா.ஜ.க. உருவானது 1980ல் தான். ஆனால் திண்டுக்கல் பூட்டு என்பது ஐவர் காலத்தில் இருந்தே இருக்கிறது. அதற்கு தற்போது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு உள்ளது. எனவே திண்டுக்கல் பூட்டுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யில் 5 சதவீதம் வரியை குறைத்தே ஆக வேண்டும். என்னை பார்த்து நீ நடிகன் அரசியலுக்கு வருகிறாய்? என்று கேட்கிறார்கள். வருமான வரி சோதனை மூலம் எங்களை பயமுறுத்த முடியாது என்கிறார்கள். ஆனால், அவர்கள் வீட்டில்தான் வருமான வரித்துறை சோதனை நடத்தி மூட்டை மூட்டையாக பணத்தை பறிமுதல் செய்துள்ளது. அப்படி என்றால் யார் சிறந்த நடிகர்கள். நானா? அவர்களா? என்பதை மக்கள் அறிவார்கள். ஆனால், நான் அவர்களைவிட சிறந்த அரசியல்வாதி என்பதை காட்டும் நாள் வெகுதூரத்தில் இல்லை. 
 

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டதா? அனைத்து துறையிலும் ஊழல் இருக்கிறது. எனவே தமிழகத்தில் ஊழல் அரசு அக்ற்றப்பட்டே ஆக வேண்டும். அதேபோல் தமிழகம் முழுவதும் 500 திறமை மேம்பாட்டு பயிற்சி மையம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்னர் வேலைவாய்ப்பு அதிகரித்து ஒரு என்ஜினீயர் சம்பளத்தைவிட உங்களால் அதிகம் பணம் சம்பாதிக்க முடியும். ஊழல் என்பது மேல்மட்டத்தில் இருந்து ஒழிய வேண்டும். கீழ்மட்டத்தில் இருந்தும் ஒழிய வேண்டும். அதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டுதான் நான் இந்த கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். இவர்கள் உங்களுக்கு செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்யவில்லை என்று நீங்கள் ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் இவர்கள் ராஜினாமா கடிதம் கொடுப்பார்கள். அந்த அளவுக்கு கட்டுப்பாடு விதித்தே இவர்களை தேர்வு செய்துள்ளேன். நாங்கள் செய்வது குடும்ப அரசியல் இல்லை. ஆனால் அரசியல் குடும்பத்திற்குள் இருக்கவேண்டும். இக்குடும்பம் யார் என்றால் நீங்கள்தான். எனவே மக்கள் சிந்தித்து டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்