“ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை வழக்குகள் மூலம் இழுத்தடித்து கட்சியை பலவீனப்படுத்தி செயல்படாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக வழக்குகள் மேல் வழக்குகள் போடுகிறார்” என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவர் நேற்று சட்டப்பேரவையில் பிரச்சனை குறித்து பேசினால் உடனே மைக்கை கட் செய்தார்கள். பேரவை என்பது மக்கள் பிரச்சனைகளை பேசக்கூடிய இடம். மக்கள் பிரச்சனைகளை பேசாமல் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பேசுவதை கேட்பதற்கா சென்றோம். கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்பதை உணர்த்த எதிர்க்கட்சியினர் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு சென்றார்கள். அதை பேரவைத் தலைவர் கொச்சைப்படுத்துகிறார். திராவிடம் என்பது நல்ல பெயர். ஆனால், அதை அகில இந்திய அளவில் திராவிடத்தின் புகழுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது திமுக அரசு தான்.
கர்நாடகத் தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து 16 ஆம் தேதி கூட்டப்படும் செயற்குழுவில் முடிவெடுப்போம். ஓபிஎஸ்ஸை பொறுத்த வரை வழக்குகள் மூலம் இழுத்தடித்து கட்சியை பலவீனப்படுத்தி செயல்படாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக வழக்குகள் மேல் வழக்குகள் போடுகிறார். சட்டரீதியாக போவதானால் எங்களுக்கு பாதிப்பு இருக்காது. நிச்சயம் நியாயம் கிடைக்கும்.
மருத்துவத்துறை என்ற ஒன்று இருக்கா என்றே தெரியவில்லை. ஆனால், சுகாதாரத்துறை அமைச்சரை டிவியில் மட்டும் பார்க்கலாம். மாத்திரையில் ஆணி இருக்கிறது. அது உள்ளே போனால் என்ன ஆகிறது. மருத்துவமனைக்கு போனால் காலைக் காணோம். குழந்தைகளின் உயிர் போகிறது. அரசாங்க மருத்துவத்தின் மீதுள்ள நம்பிக்கையே இந்த ஆட்சியில் போய்விட்டது. அதற்கு உச்சக்கட்டமாக குழந்தைகள் மருத்துவமனையில் தலைமைக் காவலரின் மகளுக்கு தவறான சிகிச்சை அளித்துள்ளனர். தலைமைக் காவலர் இது குறித்து போராடுகிறார். எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள், சிபிஐ விசாரணை அமையுங்கள் என்கிறார். காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்கிறார். இது நியாயமான கோரிக்கை தானே.
ஓபிஎஸ் மாநாடு வைத்துள்ளார். அதனால் ஒரு தாக்கமும் ஏற்படப்போவதில்லை. அவர் இன்று குழுவாக உள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் நான்கு பேர் தான் இருக்கிறார்கள். நாலு பேருக்கு நன்றி என்று சொல்லுவோம் அல்லவா. அந்த 4 பேருதான் உள்ளார்கள். பணத்தை செலவு செய்து செயற்கையான பிம்பத்தை உருவாக்கலாம். அதனால் பெரிய அளவில் தாக்கம் நிச்சயமாக ஏற்படப்போவது இல்லை” எனக் கூறினார்.